பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 4 of 15

வெயிலைப் போர்த்தியவன்.

🟥

வாழ்வின் அலைகழிப்பெல்லாம் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…

எங்கெங்கோ ஓடி ஓடி ஒளிவதும் களைப்படைந்து மூச்சிரைக்க சாய்வதும் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…

அது ஒரு பாவனை.

எதையோ மறக்க.. மறக்க முடியாமல் இறக்க.. செல்லும் நடைபாதையில் தானே தன்னையே தொலைக்கும் தோற்றம்.

வாழ்வின் கொடூர விதி என்ன தெரியுமா..

நாம் யாரை எவ்வளவு நேசிக்கிறோமோ… அதன் அளவு நாம் நேசிக்கிறவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாத அளவில் இருப்பது தான்.

இறுதி வரை அது ஒரு மாய விளையாட்டு.

சுவற்றில் வீசப்பட்டும் திரும்பி வராத ரப்பர் பந்து.

மழை நீரில் நனைந்து முழுகி போகும் காகிதக் கப்பல்.

எழுதப்படாத கவிதையை சுமக்கும் வெற்றுத்தாள்.

🟥

இடதுசாரி இயக்கங்களில் பயணித்த போது கட்சி அலுவலகத்திலேயே சதா நேரம் உண்டு உறங்கி வாழ்ந்து வந்த வயது முதிர்ந்த தோழர் ஒருவரை ஒரு காலத்தில் சந்திக்க நேர்ந்தது. கட்சி அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் தொடங்கி, வருகின்றவர்களுக்கு பதில் சொல்வதில் இருந்து, தண்ணீர் பிடிப்பது, விருந்தினர்களுக்கு டீ வாங்கி வருவது என அனைத்தும் அந்த முதிய தோழர் தான்.

இத்தனைக்கும் அவருக்கு ஒரு குடும்பம் இருந்ததை நான் அறிவேன். வார இறுதி நாட்களில் அவரை மாலை நேரங்களில் சந்தித்து விட்டு செல்லும் அவரது மகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோரின் நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவர் வீட்டுக்கு செல்வதில்லை. சொந்தமாக வீடு இருந்தது என்று கூட சொன்னார்கள். மகன் அரசு வேலையில் இருந்ததாகவும் இவரை அன்பாக பார்த்துக் கொள்ள முயற்சித்ததாகவும் சொன்னார்கள். ஆனாலும் அவர் கட்சி அலுவலகத்திலேயே இருந்தார். அது ஒரு வகையான மூர்க்கம். கட்சி அலுவலகத்தின் இரவு நேர தனிமை அவருக்கு வேண்டியதாக இருந்தது. அன்பும் நெருக்கமும் இல்லாத மேலோட்டமான உறவு நிலை அவருக்கு ஆறுதலாக இருந்தது. இதையெல்லாம் கவனித்த நான் ஒரு நாள் அவரிடம் பேச தொடங்கினேன்.

தோழர்..

சொல்லுங்க தோழர்.. தாமரை வந்திருக்கு படிச்சிட்டீங்களா..

தோழர்..உங்ககிட்ட தான் பேசணும்..

என்கிட்ட பேச ஒன்னும் இல்லையே.. என இறுகத் தொடங்கினார்.

ஏன் தோழர் வீட்டுக்கு போகாம இங்கேயே இருக்கீங்க.. என கேட்ட என்னிடம், டீ சாப்பிடுறீங்களா.. என பேச்சை மாற்று நோக்கில் மேலோட்டமாக கேட்டார்‌.

நான் நின்று நிதானித்து “சேர்ந்து டீ சாப்பிட போவோமா.. ” என்ற எனது கேள்வியில் லேசாக தோழர் பதட்டமானார்.

இல்லை.. நீங்கள் இருங்கள்.. நான் போய் டீ வாங்கி வருகிறேன் என்றார்.

சேர்ந்தே போவோமே.. என சொன்னதற்கு அவர் சட்டென என்னை பார்த்து.. ” தொல்லை செய்யாதீர்கள் தோழர்..!  போய் வாருங்கள்..” என சொன்னார் ‌.

அதிலிருந்து அவர் என்னிடம்  பேசுவதில்லை. என் முகத்தை பார்ப்பதையே தவிர்த்தார்.

எனது நெருக்கம் அவருக்கு தொந்தரவாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். ஆனாலும் அதற்கு என்ன காரணம் என என் மனம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.

பிறகு இதைப் பற்றி அவர் வயது கொண்ட இன்னொரு தோழரிடம் கேட்டபோது..

“அவன் அப்படித்தான். மனைவிகிட்டயும் இப்படித்தான் இருந்திருக்கிறான். அந்த அம்மாவும் புலம்பிக்கொண்டே போய் சேர்ந்துடுச்சு. யாரிடமும் அவன் அன்பா இருக்க முடியாது. கனிவா பேசிட முடியாது. யாராவது கனிவா பேசினா அவனுக்கு பயம் வந்துரும். தன் மீது யாரும் அன்பு பாராட்ட கூடாது என்பதில் அவன் ரொம்ப தீவிரமா இருப்பான். சின்ன வயசுல அவன் ஒரு பொண்ண விரும்பி இருக்கிறான். அந்தப் பொண்ணும் இவன தீவிரமா விரும்பி இருக்கு. இது வீட்டுக்கு தெரிஞ்சுப் போய் தகராறு ஆன உடனே கூப்பிட்டு வச்சு கேட்டதற்கு அந்த பொண்ணு சும்மா தான் பேசினேன் இவர் தப்பா நினைச்சுக்கிட்டாரு.. என சொல்ல அன்னிக்கு வெறுப்ப குடிக்க ஆரம்பித்தவன் தான். ஆயுசு முழுமைக்கும் யாரிடமும் ஒட்ட முடியாமல் வெயில் போல தகிச்சிகிட்டே இருக்கான். எண்ணெயில மிதக்கிற தண்ணி போல ஒட்டாம உலகத்தோட விலகி நிக்கிறான்”

கடைசியா கட்சியை விட்டு விலகும் போது அவரிடம் சொல்லிக் கொள்ள சென்ற போது அவர் என்னை நிமிர்ந்து பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.

வெளியே வெயில் தகித்துக் கொண்டிருந்தது.

அவருக்கு உள்ளேயும்.

🟥

எனது அணுக்க நண்பர் Suresh Kamatchi தயாரிப்பில், இயக்குனர் ராம் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கிற “ஏழு கடல் ஏழுமலை” திரைப்படத்தின் சந்தோஷ் நாராயணன் குரலில், மதன் கார்க்கி வரிகளில், இப்பாடலை கேட்டபோது ஏனோ மனித வாழ்வின் அலைகழிப்பைப் பற்றியும், அந்தத் தோழரை பற்றியும் உள்ளுக்குள் நினைவுகள் சுரந்துக் கொண்டே இருந்தன.

நல்ல படைப்பின் நோக்கம் அதுதானே…

உள்ளுக்குள் ஏதோ ஒன்றே செய்ய வேண்டும்.

இந்தப் பாடல் செய்கிறது. கேளுங்கள்.

❤️

அம்பேத்கரின் ராஜினாமா.

அம்பேத்கரின் ராஜினாமா.

அண்ணல் அம்பேத்கரைப் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோடி சில கருத்துக்களை பேசியிருந்ததை கண்டோம். குறிப்பாக அம்பேத்கர் அவர்களின் ராஜினாமா.

பிரதமர் மோடி ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போதே நாம் கவனமாகி விட வேண்டும். ஏனெனில் அதில் பொய்யும் வரலாற்று திரிபுகளும் கலந்து அக்கருத்தை உண்மை என நிறுவி விடுகிற மோடியின் துடிப்பு மிக ஆபத்தானது.

குறிப்பாக மோடி வழியாக இந்துத்துவ இயக்கங்கள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதை நாம் கவனித்து வருகிறோம். திருவள்ளுவருக்கு பட்டை பூசி காவி உடை மாட்டியதில் தொடங்கி வள்ளலாரை இந்து மத சின்னங்களோடு அடையாளப்படுத்துவதில் வரையிலான அடையாளச் சிக்கல்களை அண்ணல் அம்பேத்கருக்கும் ஏற்படுத்தும் இந்துத்துவ சதிகளில் தமிழர்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தின் எதிரியாக தன்னை நிறுவிக் கொண்டவர். தன் வாழ்நாள் முழுக்க சனாதன தர்மத்திற்கு எதிராக ஒரு மாபெரும் போரை நிகழ்த்தியவர். இந்து மதத்தின் ஆன்மாவாக கருதப்படும் மனுதர்மத்தை எரித்தவர். நான் ஒரு இந்துவாக பிறந்திருக்கலாம் ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என கம்பீரமாக முழங்கி அதன்படியே பௌத்தத்தை தழுவியவர்.

காங்கிரசை அம்பேத்கர் எதிர்த்தார். ஏனெனில் காங்கிரஸ் உயர்சாதி இந்துக்களுக்கான கட்சியாக இருந்தது. முதன் முதலாக மும்பையில் அண்ணல் அம்பேத்கர் காந்தியடிகளை சந்தித்தபோது இந்த நாட்டில் வாழ்கின்ற தீண்டப்படாத மக்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு காந்தி தீண்டாமையை ஒழிக்க காங்கிரஸ் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறது என கூற அதனால் என்ன பயன் என மறு கேள்வி கேட்டு காந்தியை திணறடித்தார் அண்ணல் அம்பேத்கர். இந்து முஸ்லிம் பிரச்சனையை விட தீண்டாமை ஒழிப்பு தான் தனக்கு முக்கியம் என அம்பேத்கரிடம் ஒத்துக் கொண்ட காந்தியை அம்பேத்கர் என்றுமே நம்பியதில்லை. இவ்வாறாக காங்கிரஸ் மீதான எதிர்ப்பு நிலையை அம்பேத்கர் எடுத்திருந்தார். அது முழுக்க முழுக்க இந்து சனாதன தத்துவ எதிர்ப்பு நிலைப்பாடு.

காந்தியடிகளின் சனாதன ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்க பேராற்றலாக நின்றார். காந்தியடிகள் இந்திய பெரு நிலத்தின் அறிவிக்கப்படாத மன்னர். எல்லோராலும் வாழும் காலத்திலேயே வழங்கப்பட்ட மனிதப் புனிதர். ஆனால் அண்ணல் அம்பேத்கர் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான புரட்சியாளர். இருவரும் வரலாற்றில் எதிர் எதிர் புள்ளிகளாக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் மிகுமதிப்பு கொண்டிருந்தார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு முதல் அமைச்சரவை உருவாகும் காலத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை தன் அமைச்சரவையில் இணைக்க நேரு எடுத்த முடிவை காந்தி மனதார பாராட்டினர்.

முஸ்லிம் லீக் உதவினால் இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெற்ற அண்ணல் அம்பேத்கர் அந்த குழுவில் இடம் பெற்ற அனைவரையும் விட கடுமையாக உழைத்தார். உலக அரசியலமைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களை இந்திய அரசியலமைப்பில் கொண்டு வர வேண்டும் என விரும்பினார். சமூகத்தின் எல்லாருக்குமான உரிமைகளை காக்கின்ற அரசமைப்பாக அது திகழ வேண்டும் என விரும்பி அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என கனவு கண்டார்.

சட்ட அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஏற்கனவே இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி புதிய இந்துமத சட்டத்தினை இயற்றிட அண்ணல் அம்பேத்கர் முயன்றார். ஏற்கனவே இருந்த இந்து மத சட்டத்தின்படி விதவை திருமணம் தடை செய்யப்பட்டிருந்தது. சாதி மறுப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடையாது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்டிருந்தது. இது போன்ற பல்வேறு பிற்போக்கு தனங்களோடு இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக புதிய இந்து மத சட்டத்தினை அண்ணல் அம்பேத்கர் இயற்ற தொடங்கினார்.

அப்போது தான் திருமணம் செய்ய நினைத்த டாக்டர் கபீர் என்று அழைக்கப்பட்ட சவீதா அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் கூட புதிய இந்து மத சட்ட தொகுப்பை எழுதி வருகிற செய்தியை குறிப்பிடுகிறார். தான் திருமணம் செய்து கொள்ள ஏற்படும் காலதாமதத்தை பற்றி தன் வருங்கால இணையரான, பிராமண சாதியை சேர்ந்த சவிதாவிற்கு கடிதங்கள் எழுதும் அம்பேத்கர் தற்போது இருக்கின்ற இந்து மத சட்டத்தின்படி தனது திருமணம் அங்கீகரிக்கப்படாது என்றும் புதிய இந்து மத சட்டம் விரைவில் ஏற்றப்பட்டவுடன் தனது சாதி மறுப்பு திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு விடும் என்றும் அந்த கடிதங்களில் குறிப்பிடுகிறார். இல்லையேல் சிறப்பு திருமண சட்டத்தின் படி தான் திருமணம் செய்ய வேண்டி இருக்கும் எனவும் குறைபட்டு கொள்கிறார்.

அப்படி அவர் இரவு பகலாக உழைத்து பாடுபட்டு உருவாக்கிய புதிய இந்து மத சட்டத் தொகுப்பினை பாராளுமன்றத்தில் அவரால் சட்டமாக்க முடியவில்லை. அவரால் முன்வைக்கப்பட்ட முற்போக்கு கருத்துக்கள் அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த இந்து மத சனாதன ஆதரவாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. நாத்திகரான நேரு இதில் நடுநிலைமை வகுத்ததை அண்ணல் அம்பேத்கர் விரும்பவில்லை. தனது தனிப்பட்ட தோல்வியாக இதை உணர்ந்த அண்ணல் அம்பேத்கர் இனியும் சட்ட அமைச்சர் பதவியில் இருப்பது பலனில்லை என உணர்ந்து தன் பதவியை 1951இல் ராஜினாமா செய்தார்.

இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு கூட இந்து மத சனாதன எதிர்ப்புணர்ச்சியின் மாபெரும் விளைவாகத்தான் ஏற்பட்டது என்பதை மோடி மறைத்து காங்கிரசுக்கும் அம்பேத்காருக்கும் பொத்தம் பொதுவாக சண்டை என காட்டுவது மோடியின் மோசடி வித்தை.

சென்று வா-எம் பாசப்பறவையே-ராபர்ட் பயஸ்.

எனது அன்பு அண்ணன்
ராபர்ட் பயஸ் அவர்களுக்கு..

ஒரு பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘விடுதலைக்கு விலங்கு’ எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள்.

ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன்.

நமக்குள்ளாக எவ்வளவோ உரையாடல்கள் இருந்திருக்கின்றன. பகிர்ந்து கொள்ள முடிந்த அனைத்தையும் நாம் பகிர்ந்திருக்கிறோம். சில சமயங்களில் எவரிடமும் பகிர முடியாத சிலவற்றை உங்களோடு மட்டும் நான் பகிர்ந்திருக்கிறேன். நின்று நிதானித்து எனக்கு நீங்கள் திசை காட்டியிருக்கிறீர்கள். என்னைக் காணும் போதெல்லாம் புன்னகை பூக்கும் உங்கள் முகம் என் ஆன்மாவில் ஒரு சித்திரமாக உறைந்து இருக்கிறது. குறிப்பாக நீங்கள் பரோலில் வந்த போது என் மைத்துனர் பாக்கியராசன் இல்லத்தில் நாம் இருந்த பொன்னான பொழுதுகள் தேன் வடியும் நினைவுகள்.

இனி உங்களது சிறகு விரும்பிய திசையெல்லாம் விரியட்டும். நிறைய வானம் பார்ப்பீர்கள். கடந்த காலங்களில் நத்தைப் போல ஒரு நாள் ஒன்று நகர்வது இனி குதிரை போல மாறும். கால மாறுதல்களின் வேகம் குறித்து நிறைய சிந்திப்பீர்கள். ஆனாலும் நள்ளிரவில் திடுக்கிட்டு விழிக்கும் போது எங்கே இருக்கிறோம் என்கிற மனப்பதட்டம் உங்களுக்குள் விரியும். உங்கள் அருகில் இருக்கும் அண்ணியும், அம்மாவும் உங்களுக்கு ஆறுதலை தருவார்கள். இதையெல்லாம் குறித்து என் வாழ்நாள் முழுக்க நான் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். என் நினைவுகளால் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டே இருப்பேன்.

நாம் வெவ்வேறல்ல.. ஒரே நினைவின் இரண்டு பிரதி என்றே உணர்கிறேன். அதனால்தான் உங்களின் உணர்வுகளை நான் உள்வாங்கி எழுத முடிந்தது என நிறைவுக் கொள்கிறேன்.

இந்த மகிழ்வான சமயத்தில் நம் மூத்தவர் தெய்வப் பெருமகன் தடா சந்திரசேகர் இல்லை என்கிற குறை மட்டும் எனக்கு ஏக்கமாய் தேங்கி நிற்கிறது. உங்களுக்கும் அது இருக்கும் தான். என்ன செய்ய.. மூத்தவரின் நிறைவேறாத ஆசையான உங்களது விடுதலை நிறைவேறி விட்ட மகிழ்வில் அவரது ஆன்மாவும் அமைதி அடைந்திருக்கும் என்று நினைவில் நாம் நிலைத்திருப்போம்.

இந்த சமயத்தில் விடுதலை கனவோடு நம்மிடமிருந்து விடைபெற்ற அண்ணன் சாந்தனை நினைவு கூர்கிறேன். அவர் இன்னும் சில காலம் நலமோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அண்ணன்கள் முருகன் ஜெயக்குமார் ஆகியோர் குடும்பங்களோடு இணைகிற இப்பொழுதுகளில் அவர்களது நலமும் வளமும் நீடிக்கட்டும்.

சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள்.
பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள்.

போய் வாருங்கள் அண்ணா. உங்கள் பால்யத்தில் நீங்கள் திரிந்த நதிக்கரையில் பால் நிலா பொழுதுகளில் காலார நடந்து செல்லுங்கள். நீங்கள் நேசித்த தாய் மண்ணை உங்கள் நினைவுகளின் கண்ணீரில் குழைத்து நெஞ்சில் பூசிக்கொள்ளுங்கள்.

சுருங்கிவிட்ட இந்த உலகில் என்றாவது ஒரு நாள் மீண்டும் நாம் சந்தித்தே தீருவோம். அந்த நாளுக்காக இங்கே நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். இந்த பூமியின் ஏதோ ஒரு இடத்தில் கடற்கரை ஓரத்தில் மகிழ்வான பொழுதில் நாம் நினைத்து சிரித்துப் பேச நிறைய செய்திகள் அன்று பூத்துக் குலுங்கும்.

அன்றைய நாளுக்காக … இனி நாங்கள் காத்திருப்போம்.

நெகிழ்வான நினைவுகளோடும்.. நெஞ்சம் முழுக்க பேரன்போடும்..

என்றும் உங்கள் தம்பி..
மணி செந்தில்.

பிரேமலு-மெல்லிய புன்னகையின் மொழி.

ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு நிறைய பிறமொழித் திரைப்படங்களை மிக எளிதாக பார்க்க முடிகிறது. தேர்தல் பணிக்கு பிறகான காலத்தில் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும் என நினைத்திருந்த பல திரைப்படங்களை பார்க்க முடிந்தது. குறிப்பாக பிரேமலு.(Premalu -2024) நாம் பல படங்களில் பார்த்து அலுத்து தீர்த்த மிக மிக ஒரு சாதாரண திரைக்கதையை மிகவும் புதிதாக அதே சமயத்தில் வசீகரமாக எடுக்க முடிகிற வித்தை அசாத்தியமானது.

படம் நகரும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மெல்லிய சிரிப்பினை நம் முகத்தில் தக்கவைத்து, படம் முடியும்போது “அட” போடவைத்து அட்டகாசப்படுத்தி விடுகிறார்கள். இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு சக்தி அதன் கதாநாயகன் தான். இத்தனைக்கும் அவன் கதாநாயகனுக்குரிய எவ்விதமான சாகச திறமைகளும் இல்லாதவன். அவன் நம்மில் ஒருவன். சொல்லப்போனால் நாம் தான் அவன். அதனால் படம் பார்ப்பவர்கள் அனைவரும் அந்த கதாநாயகனில் தன்னைக் கண்டு கொள்கிறார்கள். அவனது மூடத்தனங்களில், போதாமைகளில், இயலாமைகளில், தங்களின் வாழ்வை ஒப்பீடு செய்து தங்களுக்குள்ளாக சிரித்து வெட்கப்பட்டு கொள்கிறார்கள்.

கிரீஷ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை பகத் பாஸில் மற்றும் அவரது நண்பர்கள் தயாரித்திருக்கிறார்கள். கதாநாயகன் சச்சின் சந்தோஷாக நடித்துள்ள நஸ்லீன் தன் நுட்பமான முக பாவனைகளால் பிரமாதப்படுத்துகிறார். எப்போதும் ஏக்கமும் ஏமாற்றமும் தடுமாற்றமும் நிரம்பிய முகத்தோடு அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் “அட நாமும் இப்படி இருந்திருக்கிறோமே..” என நினைக்க வைக்கின்ற திரை மொழி பேரழகு.

கதாநாயகனின் நண்பன் அமல் டேவிஸாக வரும் சங்கீத் பிரதாப் மற்றும் ஏறக்குறைய வில்லன் கதாபாத்திரத்தில் ஆதியாக சியாம் மோகன் என ஆளுக்கு ஆள் அவரவர் பங்கிற்கு பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் பிறரின் மூடத்தனங்களை, போதாமைகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். முதன் முதலாக ஒரு திரைப்படம் வாயிலாக நம்மை பொருத்திப் பார்த்து நாம் சிரித்துக் கொள்கிறோம். அதுதான் பிரேமலு கொண்டிருக்கும் தனித்துவம்.

தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

அவசியம் பாருங்கள்.

ஒரு மகிழ்வான மாலை உறுதி.

❤️

மணி செந்தில்.

இசைஞானி 81

🟥

ஒரு மனிதன் தனித்துவிடப் படுகின்ற தருணங்களில் தான் தன்னை நோக்கி வரும் தேவ கரங்களை யாசிக்கிறான். தனிமையும் மௌனமும் கனத்திருக்கும் பொழுதுகளில் சங்கடங்களில் சரிந்திருப்பவன் சாய்ந்திருக்க தோள் ஒன்றை தேடுகிறான். அப்போதுதான் இளையராஜாவின் கிட்டார் மீட்டல்களோ, பியானோ தீட்டல்களோ அவனை மீட்க காற்றின் ரதம் ஏறி இதம் சுரக்க வருகின்றன.

உடலெங்கும் செடிகள் மேவிய பழங்கோவில் ஒன்றில் சிற்ப இடுக்கில் ஊடுருவிப் பாயும் ஒற்றை வெளிச்சம். சட்டென தட்டும் ஒரு கைத்தட்டலால் தாழ்வாரத்தில் தானியம் பொறுக்க வரும் பறவை ஒன்றின் சிறகடிப்பு. வயல் நிறைந்த பயிர்களில் தேங்கி இருக்கும் அதிகாலைப் பனி.பின்னிரவில் சாலை விளக்கு ஒன்றின் தனிமை.பள்ளி முடிந்து வரும் குழந்தைகளின் துள்ளல். என இளையராஜாவின் இசையால் உணர்த்தப்படாதவை எது.. எது..??

எல்லாராலும் கைவிடப்படுபவர் இளையராஜாவால் தத்தெடுக்கப்படுபவராகி தத்தளிப்பில் இருந்து மீள்கிறார். தோல்வியடைந்த பின்னிரவுகளில் தனித்திருக்கும் போது ” கண்ணே கலைமானே..” கேட்டு “உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே..” என்று குழைந்து நெகிழாதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

முதன்முதலாக காதலை உணர்ந்த ஒரு மழை மாலைப் பொழுதில் “காதலில் தீபம் ஒன்று..” கேட்டு கன்னக்கதுப்பில் மிளிரும் புன்னகையோடு வானத்தைப் பார்க்காதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

இன்றும் “வருஷம் 16” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டுப் பாருங்கள்.


https://youtu.be/bAnsu5udPDs?feature=shared

நாம் வாழ்ந்த வாழ்க்கையை, அப்படியே மீண்டும் சம்பவங்களோடு ரீவைண்ட் செய்து
நமது அகக் கண்களால் நாமே காண முடிகிற அந்த மேஜிக் தான் இளையராஜா.

உங்களில் யார் யார் “கோபுர வாசலிலே” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டிருப்பீர்கள்..??

கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூடிய உங்கள் கண்களுக்குள் ஒரு நொடியில் இருண்மையையும், அடுத்த நொடியில் வெளிச்சத்தையும் ஒருங்கிணைக்கிற அந்த குகை வழி ஞானப் பயணத்தை இளையராஜாவை விட யாரால் வழிநடத்த முடியும்..??

என்னைப் பொறுத்த வரையில் அவரை சார்ந்து இசை /மொழி என்றெல்லாம் விவாதங்கள் எழுப்பப்படுவது அர்த்தமற்றவை.
அவரது படங்களில் பின்னணி இசையில் கலாபூர்வமாக காட்சி இடைவெளியில் அவர் விடுகின்ற சிறு மௌனம் கூட அறிகிறவர்களுக்கு பேரிசை தான்..

“அழகி” படத்தில் சாலை ஓரத்தில் பார்க்க நேர்ந்து விட்ட காதலி அளிக்கும் உணவை சாப்பிடும் போது மழை பெய்யும் பொழுதில் அவன் நனையாமல் இருக்க காதலி ஒரு தடுப்பினை பிடிக்க.. அங்கே கொடுப்பார் பாருங்கள் கலை மேன்மை கொண்ட ஒரு மௌனம்..

அதற்குப் பிறகு அவரது கனத்த குரலில் “உன் குத்தமா என் குத்தமா” என இசை எழும்போது உள்ளுக்குள் உணர்ச்சியின் உருண்டை வயிற்றிலிருந்து உருண்டு வந்து தொண்டைக்குள் அடைத்து விழி நனையாதவர் யார் யார்..??

மௌனத்தை கூட தனது இசையின் பக்க வாத்தியமாகக் கொண்டவருக்கு ஏது மொழி.. ??

காதலுக்கு மரியாதை என்கின்ற படத்தின் உச்சக் காட்சியில் எந்த வசனமும் இல்லாமல் எந்த சண்டைக் காட்சியும் இல்லாமல் வயலின்களை வைத்தே கிளைமாக்ஸை நிறுவி இருப்பாரே.. அதற்கு ஏது மொழி..??

பசிக்கும், கனவிற்கும், காதலுக்கும், காமத்திற்கும், தோல்விக்கும், தவிப்புக்கும், வறுமைக்கும், வாழ்வின் இருண்மைக்கும், நெகிழ வைக்கிற தாய்மைக்கும் , நோக வைக்கிற நோய்மைக்கும், இன்னும்.. இன்னும்.. உள்ளுக்குள் ஊறுகிற ஓராயிரம் உணர்ச்சிக்கும் ஏதேனும் மொழி இருக்கிறதா என்றால்.‌.

இருக்கிறது..

அதன் பெயர் இளையராஜா.

அதுதான் எங்கள் மொழி.
அதுதான் எங்கள் வலி
மறக்க இருக்கும் வழி.

எம் வாழ்வின்
எல்லா
நொடிகளிலும்..

இமைக்க மறந்து,
இதயம் நனைந்து,
இசையில் எமை
நிறைக்கும்,
இசை இறைவன்
இளையராஜாவிற்கு,
இனிய பிறந்தநாள்.
வாழ்த்துகள்.

❤️

மணி செந்தில்.

இசைஞானி81

HBDIlayaraja

An Unread message…

❤️

இன்னும்
அலைபேசி திரையில்
நான் பார்க்காத
உனது
குறுஞ்செய்தி ஒன்று
பனிக்கால இரவில்
சாக்கு பையின்
கதகதப்பில்
படுத்திருக்கும்
பூனைக்குட்டி போல
உறைந்திருக்கிறது.

உடனே
திறந்துப் பார்க்க
முடியாமல்
படிக்காத குறுஞ்செய்தியை
உறைந்த பார்வையோடு
பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்.

அது விரல் படாத
பியானோ பொத்தான்கள்
போல ஏதேனும் இசைத்துளி ஒன்றை உள்ளுக்குள்
தேக்கி இருக்கக்கூடும்
என எண்ணுகிறேன்.

அல்லது

ஒரு பெரு மழையோ
ஒரு சுடும் பாலையோ
இன்னும் ஏதாவது
இருக்கக்கூடும்.

இந்தக் குறுஞ்செய்தியைப்
படிக்க நான்
தனிமையும்
பனியும் நிறைந்த
ஒரு மலைமுகட்டை
தேட வேண்டி இருக்கிறது.

சில சமயங்களில்
உன்
குறுஞ்செய்திகளை
படிக்கும்போது
என் கழுத்தை கவ்வும்
ஒரு ஓநாய்
காத்திருப்பது என்பது
எதேச்சையானது அல்ல‌.

பிரிபடாத
அந்தக் குறுஞ்செய்தியில்
ஏதேனும் காரணங்கள்
இருந்து விடக் கூடாது என அஞ்சுகிறேன்.

காரணங்கள் இல்லாமல் குறுஞ்செய்தி
அனுப்பி
கொண்ட காலங்கள்தான்
பொன்னிழைப் பொழுதுகள்.

காரணங்கள்
அலுப்புட்டுகின்றன.
காரணங்கள்
சுயநல ஒப்பனையோடு
துருத்திக் கொண்டு தெரிபவை.

காரணங்களே
இல்லாமல்
அனுப்பப்படும்
குறுஞ்செய்திகள் தான்
காதலின் மது அருந்தி
பேரன்பின் நிர்வாணத்தோடு
இமைகள் கிறங்க
வந்திறங்கி
நம் இதயம் இடறுபவை.

காரணங்கள்
இல்லாமல்
குறுஞ்செய்தி அனுப்புவது
என்ன
காரணத்திற்காக
என்று கேட்கிறார்கள்.

நீயும் நானும்
இருக்கிறோம்
என்கிற காரணம்
ஒன்றே ஒரு
குறுஞ்செய்தி
அனுப்புவதற்கு போதாதா..

அவர்களுக்குத்
தெரியாது.
எழுத்துக்கள் இல்லாத
வெறுமை
குறுஞ்செய்திகளில் கூட
வாசிக்கக்கூடிய செய்திகள் இருக்கின்றது என்று.

அதையும் தாண்டி..
யாருக்கேனும்
காரணங்கள் தேவைப்பட்டால்
நம்மிடம் உதிர்த்துக்கொள்ள
ஒரு கன்னக் கதுப்புப்
புன்னகையும்,
பின்னணியில்
இசைந்துக்கொள்ள
ஒரு இளையராஜாவின் இசைத்துண்டும்
தயாராகவே இருக்கின்றன
என்பதே காரணங்களாக இருக்கின்றன என்று
அவர்களுக்கு எப்படி
உணர்த்துவது..??

“சாட்டை”க்கு பாராட்டுக்கள்..

LGBTQ+ வினரை பற்றி தம்பி சாட்டை துரைமுருகன் மிக முக்கியமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. முதலில் இதை விவாத பொருளாக மாற்றியதற்கே தம்பி துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வரலாற்றால் வஞ்சனை செய்யப்பட்டவர்களுக்கும் வழங்கப்படுவது தான் நீதி. பாதிக்கப்பட்டவர்களோடு நிற்பது தான் அறம். அதைஉணர்ந்து தம்பி துரைமுருகன் செயல்பட்டிருப்பதை மனதார பாராட்டுகிறேன்.

1960களில் ஓரின பால் ஈர்ப்பு என்பது மனநலம் சார்ந்த பிரச்சனையாக கருதப்பட்டு வந்த நிலையில் நவீன மருத்துவம் அது “ஹார்மோன் மாறுபாட்டினால் ஏற்படுகிற நிலைமை” என்பதை கண்டறிந்த பிறகு உலகளாவிய அளவில் LGBTQ+ வினரைப் பற்றி பார்வைகள் மாறி இருக்கின்றன.

1870களில் இயற்றப்பட்ட ஆங்கிலேய சட்டத்தின் பிரதியான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 ஓரின பால் ஈர்ப்பை இயற்கைக்கு மாறான உறவு என வரையறுத்து தண்டனைக்குரிய குற்றமாக வைத்திருந்ததை 2018 ல் உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து ஓரின பால் ஈர்ப்பு குற்றச் செயல் அல்ல என அறிவித்தது. ஆனால் சமத்துவத்திற்கு எதிரான பிரிவு 377 ஐ ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதையும் அது பாராளுமன்றத்திற்கு தான் உண்டு என்பதையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதேபோல் உலகளாவிய முறையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஓரின சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்து இருக்கின்றன. இந்த முற்போக்கு வரலாற்றின் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் இயற்றி அவர்களுக்கான கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு போன்றவற்றில் காட்டப்படும் பாகுபாட்டை தடுக்கிறது.

நவீன அறிவியல் /மருத்துவ சிந்தனைகளால், கண்டுபிடிப்புகளால் பழைமை நிறைந்த பிற்போக்கு கருத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. காலம் காலமாய் புறக்கணிக்கப்பட்ட சமூகமாய் இருந்த LGBTQ+ வை சேர்ந்தவர்கள் பொதுச் சமூகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தை அவர்கள் ‘பெருமை மாதமாக” ( Pride Month) அறிவித்து பேரணிகள் நடத்துகிறார்கள்.

பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து தங்களுக்கான உரிமைகளை, தங்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் கோருகிறார்கள். இது மனநலம் சார்ந்த பிரச்சனை அல்ல, ஹார்மோன் மற்றும் உடல் மாறுதல்களால் ஏற்படுகின்ற விளைவு என்பதை பொதுச் சமூகத்திற்கு புரிய வைக்க அவர்கள் மிகுந்த அவமானங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் நடுவில் நீண்ட காலம் பயணித்திருக்கிறார்கள்.

எண்பதுகளில் வெளியான ஒரு தலை ராகம் திரைப்படத்தில்
” கொக்கரக்கோ கோழி கூவுற வேளை” என கிண்டலும், அவமானமும் நிறைந்த சின்னங்களாக பொதுச் சமூகத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டவர்கள் அடைந்த இழிவுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று அவர்களையும் மனிதர்களாக பார்க்கின்ற சக உயிரிகளாக பார்க்கின்ற குரல்கள் ஆங்காங்கே எழ தொடங்கியிருக்கின்றன.

திருநங்கைகள் பெரும்பாலும் கண்ணியமானவர்களாக காட்டக்கூடிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கி இருக்கின்றன. சரத்குமார், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் கூட திருநங்கைகளாக நடிக்க முன்வருவது அனைத்தும் மாறி வருகிற முற்போக்கு சிந்தனைகளின் வெளிப்பாடுகளே. ஒரு தலை ராகம் தொடங்கி காஞ்சனா/ சூப்பர் டீலக்ஸ் வரையிலான காட்சி அமைப்பு மாறுதல்களின் வரலாற்றுக்குப் பின்னால் எண்ணற்றவர்களின் துயர நிறைந்த போராட்டக் கதைகள், அவமான வலிகள், ஒதுக்கப்பட்டவர்களின் காயங்கள் ஒளிந்து இருக்கின்றன.

சமீபத்தில் ப்ரைமில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்கின்ற தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று லெஸ்பியனாக வடிவமைக்கப்பட்டு அவர்களின் துயரம் பற்றி காட்சி அமைப்புகள் இருந்ததும் , பல வெப் தொடர்களில் ஓரின பால் ஈர்ப்பு பற்றி வெளிப்படையாக பேச தொடங்கி இருப்பதும் ஆரோக்கியமான காட்சிகளே.

நம்மோடு பிறந்தவர்கள் அவர்களை ஏன் நாம் அருவெறுப்பாக பார்த்து ஒதுக்க வேண்டும் என்கிற கேள்வி இன்று பரவலான பொதுக் கேள்வியாக மாறி இருக்கிறது. அவர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் இணைத்து பேசுவது போன்ற பிற்போக்குத்தனங்கள் குறைந்து இருக்கின்றன. காலங்காலமாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிய திரைப்படங்கள் எவ்வாறு இன்று குறைந்து போயிருக்கிறதோ, பிற்போக்கு சிந்தனைகளின் வடிவமாக பார்க்கப்படுகிறதோ அதேபோல LGBTQ+ வினரை தவறாக காட்டுகின்ற திரைப்படங்களும் குறைந்திருக்கின்றன என்பது ஆறுதலான மாறுதல்.

பாலியல் தேர்வு என்பது அவரவர் தனிநபர் சார்ந்தது.LGBTQ+ வினரில் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள், இரு பாலின ஈர்ப்பாளர்கள் இருப்பது போல எந்த பாலினத்தின் மீதும் ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இயல்பான மனிதர் வாழும் சாதாரண வாழ்விற்காக, எல்லோருக்கும் கிடைக்கும் சாதாரண உரிமைகளுக்காக சமத்துவ சமூகம் வேண்டி அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு இப்போதைய தேவையெல்லாம் நம் புரிதல் மட்டுமே.

மற்றபடி பிற்போக்குத்தனங்களின் பிதற்றல்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவே கத்தி தானாக ஓய்ந்துவிடும். இது வரலாற்றில் எப்போதும் நடப்பது தானே.

மற்றபடி புரிந்துணர்வு மிக்க, ஆகச் சிறந்த, மனம் நிறைந்த பாராட்டப்பட வேண்டிய காணொளி வெளியிட்ட Saattai- சாட்டை க்கும், என் ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகனுக்கும், எனது மனமார்ந்த பாராட்டு‌. பேரன்பு.

அவன் என் தம்பி என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

மணி செந்தில்.

உவர்ப்பு இல்லா கண்ணீர்.

“மனிதன் தாங்கக்கூடிய அளவிற்கே கடவுள் துன்பத்தை தருகிறான்” என்கிறது புனித நூல் திருக்குர்ஆன்.அது என்ன தாங்கக் கூடிய அளவு.. அப்படி துன்பத்திற்கு அளவுகோல்கள் இருக்கிறதா என்ன.. துன்பத்தில் எது பெரிய துன்பம் எது சிறிய துன்பம்.. துன்பம் என்பதே வலி தானே என்றெல்லாம் சிந்தனைகள் விரிந்து கொண்டே போகின்றன.

10 ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பிறகு பிறந்த குழந்தை 1 1/2 வயதில் இறந்துவிட்ட கொடுமையை சமீபத்தில் என் குடும்பம் சந்தித்தது. என் வீட்டுப் பெரியவர்கள் விழிகளில் வலியை சேமித்து உறைந்து விட்டார்கள். கண்ணீர்/கதறல் போன்ற உணர்ச்சி கொந்தளிப்புகளை எல்லாம் தாண்டி உறைந்து விடுவது என்கிற நிலையை என் வீட்டிலேயே நான் கண்டேன். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை.இன்று காலை எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சட்ட உதவிக்காக என்னை அழைத்தார். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டாவது மகன் மட்டும் கொஞ்சம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் குறைந்தவர்.அவரை தனது மூத்த மகன் மிகவும் மோசமாக நடத்துவதாகவும், அடிக்கடி தாக்கி விடுவதாகவும், அதை அவர் மிகுந்த வலியோடு என்னிடம் தெரிவித்தார். மூத்தமகனை அழைத்து வாருங்கள் நான் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.வாழ்வின் மிகக் போராட்டம் எதுவென்று சிந்திக்கும்போது உடல் நலமில்லாத குழந்தைகளை வளர்க்க பெற்றோர் நடத்துகிற போராட்டம் தான் என்பதை உணர முடிகிறது. எந்த நேரம் எது நடக்கும் என்று குழந்தைகளின் உடல்நலத்தைப் பொறுத்து எதுவும் தெரியாது. தன் கண் எதிரே தன் குழந்தைகள் படும் பாடு கண்டு பெற்றோர் அடையும் துயரத்தின் உயரம் எவரெஸ்ட்டை விட பன்மடங்கு பெரியது.

என் குடும்பத்திலேயே “ஆட்டிசம்” பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவன் இருக்கிறான். அவனை உருவாக்க அவனது தாய் படும் பாட்டை நான் அருகில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அந்தப் பெண்ணுக்கு அச்சுஅசலாக என்னுடைய தாய் முகம். சிறுவயதில் என் அம்மா எப்படி என்னை தூக்கிக்கொண்டு அலைந்தாரோ அதேபோல அவளும் ஒரு சுமைத் தாங்கியாக மாறி இருப்பது வாழ்வின் அசலான மனிதர்கள் நகலெடுத்துக் கொண்டது போல இருக்கிறது. அவள் எப்போதும் நோயற்ற குழந்தையைப் பெற்று வென்ற என் அம்மாவின் கண்களில் இருந்து நம்பிக்கையை பெற்றுக் கொண்டே இருக்கிறாள். அவளது வெற்றிக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.

முழுமையான உடல் நலம் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் வரம் வாங்கியவர்கள். அமைதியாக உறங்கும் இரவுகளை அடைந்தவர்கள்.அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் சாலையை கடந்து செல்லும் முடி இழந்த சில குழந்தைகளை பார்க்க நேரிட்டது. தனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்று தெரியாமலேயே உலவும் அந்த குழந்தைகளின் விழிகளை பார்த்துவிட்டு நிதானமாக இருக்க முடியவில்லை.ஒரே சமயத்தில் பால்யத்தின் குறுகுறுப்பும், நோயின் தீவிரம் தரும் வலியின் நிழலும் கொண்ட அந்த விழிகள் எப்போதும் தன் தாய் தந்தையரையே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

நோய்மை நிறைந்த குழந்தைப் பருவம் மிகத் துயரமானது. நோய் தருகிற வலி, உறக்கமற்ற இரவுகள் இதுவெல்லாம் ஒருபுறம், இன்னொரு புறம் நண்பர்கள் தோழிகள் விளையாட்டுகள் இல்லாத தனிமை. மருத்துவமனையின் வெளிறிய சுவர்களை பார்த்து களைப்படையும் கண்களோடு இருந்த எனக்கு என் தந்தை புத்தகங்கள் மூலம் விடுதலைப் பெற்றுத் தந்தார். இந்த ஆன்ம விடுதலை அனைவருக்கும் கிடைப்பதில்லை.

“The Miracle”( 2015) என்கின்ற துருக்கி நாட்டு திரைப்படம் ஒன்று இருக்கிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த திரைப்படம் “Mahsun Kırmızıgül” என்பவர் இயக்கி இருந்தார். பள்ளிக்கூடம் இல்லாத ஒரு கிராமப்புறத்திற்கு பணிக்காக செல்லும் ஒரு ஆசிரியர் அங்கே நோய்மையால் பாதிக்கப்பட்ட பேச்சுத்திறன் இழந்த சரிவர நடக்க முடியாத ஒரு வாலிபனை சந்திக்கிறார். அந்த ஆசிரியர் மற்றும் எதிர்பாராத விதமாக அவனுக்கு அமைந்த மனைவி மூலம் அந்த வாலிபன் உலகின் அனைத்து உயரங்களையும் அடைவது தான் அந்த கதை. எனது ஆருயிர் தம்பி கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி விக்கி தனிமை உணர்ச்சி வெகுவாக ஆட்கொண்ட ஒரு நாளில் எனக்கு இந்தத் திரைப்படத்தை பரிந்துரைத்தார். இரண்டு பாகங்களையும் முழு வீச்சில் பார்த்து முடித்த எனக்கு அதற்கடுத்த இரண்டு நாட்கள் படம் தந்த தாக்கத்திலேயே கழிந்தன. எல்லோரும் மிக முக்கியமாக காண வேண்டிய அந்த திரைப்படத்தின் முதல் பாகம் நெட்ப்ளிக்ஸ் -சில் கிடைக்கிறது. இரண்டாம் பாகம் youtubeலயே இருக்கிறது. நோயற்ற பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களை பற்றி இந்த படம் பேசியது போல வேறு எந்த படமும் இவ்வளவு நுட்பமாக பேசியதாக தெரியவில்லை.

இளம் வயது நோய்மையின் மிக உக்கிரமான உச்சம் அது தருகிற தனிமை. இளம் வயதில் உளவியலாக அந்தத் தனிமை உணர்ச்சியை அடைந்தவர்கள் வாழ்நாள் முழுக்க எல்லா பொழுதுகளிலும் அந்த தனிமை உணர்ச்சி ஆன்மாவில் தேங்கி நிற்கும். “வேலையில்லாதவனின் பகல் பொழுது தான் உலகத்திலேயே மிக நீளமானது” என்ற வரியை எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். நோயுற்றவனின் இரவும் அப்படித்தான். வலியும் தனிமை உணர்ச்சியும் நிரம்பிய அந்த இரவுகள் முடிவே இல்லாத ரயில் பெட்டிகளின் வரிசையை நினைவூட்டுபவை.

“ஆரோக்கிய நிகேதனம்” என்ற 1953இல் வெளியான புகழ்பெற்ற ஒரு வங்காள நாவல் இருக்கிறது. அதை எழுதியவர் தாரா சங்கர் பந்த்யோபாத்தியாயா. தமிழில் குமாரசாமி மொழி பெயர்த்திருக்கிறார். ‘சாகித்ய அகாதெமி’ சார்பில் வெளியாகி இருக்கும் இந்த நூல் நோய்மையின் வெவ்வேறு குணாதிசயங்களையும், குணப்படுத்தும் வெவ்வேறு வழிகளையும் பற்றி விவாதிக்கின்ற அந்த நூல் மரபு சார்ந்த மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் இடையே இருக்கின்ற முரண்களைளையும் அரசியலையும் நுட்பமாக காட்டுகிறது. அதில் ஜீவன் மசாய் என்கின்ற முதன்மை கதாபாத்திரம் உண்டு. தலைமுறை தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்து வரும் குடும்பத்தில் பிறந்த அவர் ஆங்கில மருத்துவப் படிப்பில் சேர்ந்து மஞ்சரி என்ற பெண்ணை காதலித்து பிரிந்து, நிறைவேறாத காதலின் காரணமாக படிப்பை கைவிட்டு, தந்தை வழி ஆயுர்வேதத்தை தொழிலாக மட்டுமல்ல வாழ்வியலாக மாற்றி பின்பற்றி புகழ் பெற்ற ஆரோக்கிய நிகேதனம் என்கின்ற மருத்துவமனையை நிறுவுகிறார். ஆத்தர் பவ் என்ற பெண்ணை மணமுடிக்கும் அவர் வாழ்நாள் முழுக்க மனைவியின் வெறுப்பை சுமந்து ஆங்கில மருத்துவம் படித்த காதலியின் பேரனுக்கு நோய்மையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் புரிதலை உருவாக்கி மறையும் அவரது பாத்திரப்படைப்பு இந்திய நாவல் உலகில் தலைசிறந்தது . இளம் வயதிலேயே தன் மகனை பறிகொடுத்த ஜீவன் மசாய் “எல்லோருக்கும் எதிர்பாராத ஒரு நொடியில் மரணம் தான் முடிவு, அதை வெல்ல யாரும் இல்லை” என்பதை தன் வாழ்நாள் முழுக்க வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் அந்தக் கதை. நோயைப் பற்றி தமிழில் சமீபத்தில் வந்திருக்கும் மருத்துவ புதினம் அக்குபஞ்சர் மருத்துவர் உமர் பாருக் எழுதிய “ஆதுர சாலை” நவீன மருத்துவ முறைமைகளைப் பற்றி பல கேள்விகள் எழுப்புகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு புகழ் பெற்ற ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். அவரின் மகள் சிறு வயதிலேயே இன்சுலின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஊசி போடக்கூடிய நிலைக்கு ஆளானவர். பணியில் இருக்கும் நேரத்தில் கூட ஓடிப் போய் தன் மகளுக்கு ஊசி போட்டுவிட்டு வியர்த்து விறுவிறுத்து வேக வேகமாக திரும்பும் அவரின் துயரத்தை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் . அவரும் அவரது மனைவியும், தன் மகளை வளர்த்து, படிக்க வைத்து திருமணம் செய்து வைத்த பொழுதில், ‌ அவர்களிடம் சென்று ‘நீங்கள் வென்று விட்டீர்கள்’ என சொல்லிவிட்டு நகர்ந்த போது அவர்களது விழிகள் கண்ணீரால் நிறைந்தன. அந்த நிறைவு தரும் முழுமை போல உலகில் வேறு எதுவும் முழுமையில்லை.

அந்த நேரத்தில் உதிர்க்கும் கண்ணீர் கூட உவர்ப்பு இல்லாத உவப்பு தானே..??

தேவைப்படும் சில புரிதல்கள்

சமூக வலைதளங்களிலும், அரசியல் பரப்புகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்பற்ற இரண்டை ஒப்பிட்டு விவாதப் பரப்பு ஏற்படுத்துவது இப்போதெல்லாம் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த வகையில் இப்போது
இதுவும் ஒன்று.

விஜய்யின் வருகையால் நாம் தமிழருக்கு பாதிப்பா..???

முதலில் நாம் தமிழர் அரசியலையும், நடிகர் விஜய் அரசியல் வருகையையும் ஒப்பீடு செய்யப்படுவது அர்த்தமற்றது.

2009 ல் நடந்த இனத்தின் அழிவு தாங்காமல், தொடர்ச்சியான நம் இனம் அடைந்து வருகிற இழிவு பொறுக்காமல், கொதிப்படைந்த இளைஞர் கூட்டம் நாம் தமிழரை உருவாக்கியது.

வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, மெய்யியல், சூழலியல், என பல்துறை சார்ந்த இனத்தின் எழுச்சி நாம் தமிழர் வருகைக்குப் பின்னால் இந்த மண்ணில் நிகழ்ந்தது. அதுவரை பேசப்படாத பொருட்கள் பல பேசு பொருளாக மாறியது. இந்த 13 ஆண்டுகளில் நாம் தமிழர் நம் மண்ணில் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. இதற்குப் பின்னால் உறக்கத்தை தொலைத்து உழைப்பை மட்டுமே கொண்டு தனது குரலால் வீதிக்கு வீதி கொள்கை முழக்கம் செய்து கொண்டிருக்கின்ற அதிமனிதன் அண்ணன் சீமானும், அவர் பின்னால் சாதி மத வேற்றுமைகளுக்கு எதிராக தமிழர் ஓர்மை அடைந்து , திரண்ட தன்னிகரற்ற தம்பி, தங்கைகளின் தமிழ்த்தேசிய பற்றுறுதி போன்ற கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன.

தோன்றும்போதே வெடித்து கிளம்பியது போன்ற வரலாற்று பெருவெடிப்பு நாம் தமிழர் கட்சிக்கு நிகழ்ந்தது. ஒரு பக்கம் ஊடகப் புறக்கணிப்புகள் மறுபக்கம் அரசு அதிகாரத்தின் தடைகள் மற்றும் வழக்குகள் இதற்கெல்லாம் முகம் கொடுத்து அண்ணன் சீமான் தலைமையில் எளிய இளைஞர்கள் திராவிட/தேசிய அரசியலுக்கு மாற்றாக புதிதான தமிழ் தேசிய அரசியல் உருவாக்கியது இந்த மண்ணில் நிகழ்ந்துவிட்ட புரட்சி. குறிப்பாக படித்த இளைஞர்கள் /இளம் பெண்கள் அறிவாயுதம் ஏந்தி வீதிகளில் திரண்டது தமிழக அரசியல் பரப்பில் இதுவரை பாராதது.

நடிகர் ரஜினிக்கு வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று அன்று கேட்டார்கள். இன்று நடிகர் விஜய் வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று கேட்கிறார்கள். யார் வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. ஏனெனில் எங்களது இலக்கும், பயணத்தின் பாதையும் தியாகமும், தீரமும் மிக்க எங்களது இன முன்னோர்களால், மாவீர தெய்வங்களால் வடிவமைக்கப்பட்டது. தமிழர் நிலத்தில் தமிழர் ஆட்சி. தூய தமிழ் மொழி வழியில் தமிழ் வீதிகள். தமிழர் நிலத்தில் தமிழுருக்கே முதல் உரிமை. எங்கிருந்தோ வந்தவர்கள் இங்கே நலத்துடன் வாழ, இங்கிருந்தவர்கள் வரலாற்றின் வீதியில் எங்கோ தொலைய என்கின்ற திராவிடப் போக்கு தொலைந்து தீந்தமிழர் ஆட்சியில் எல்லா உயிருக்குமான நலம். கல்வி அறிவியல், சூழலியல், கனிம வள பாதுகாப்பு, நீர்நிலைகள் மீட்டெடுப்பு, ஊழலற்ற ஆட்சி முறை , தற்சார்பு தாய்மைப் பொருளாதாரம் என ஒரு லட்சம் கனவுகளை உள்ளுக்குள் தேக்கி அதிகாரத்தை நோக்கி நாங்கள் அடி எடுத்து வைக்கும் பயணம் மற்றவர்கள் போல் அல்ல.

ஒரு தேசத்தை புதிதாக கட்டுமானம் செய்ய முயல்கிற புரட்சியின் பொறியாளர்கள் நாங்கள். திரைத் துறையை சேர்ந்த அண்ணன் சீமான் அவர்களை நாங்கள் திரை வசீகரத்தில் தேடிக் கண்டடைந்தவர்கள் அல்ல. இன அழிவின்போது சகிக்காமல் பெருங்குரலெடுத்து அழுது துடித்த எங்கள் குருதி தேய்ந்த ஆன்மாவின் மனித வடிவம் அவர். அடக்க முடியாத எங்களது கோபத்தை அவர் மேடையிலே வெளிப்படுத்திய போது ஒத்த உள்ள அலைவரிசைகள் ஒன்றாய் இணைந்து ஒரு புரட்சிகர பயணத்திற்கு எங்களை அணியமாக்கியது.

தமிழினத்தில் பிறந்த புகழ்பெற்ற திரைக்கலைஞன் என்கின்ற முறையில் நடிகர் விஜய் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும், பேரன்பும் என்றும் உண்டு.

மற்றபடி வருங்காலத்தில் அவர் முன் வைக்க இருக்கிற அரசியல் அவர் யார் என்று காலத்தின் வீதியில் கணக்கிட்டு காட்டும். அதன் பொருட்டு எம் ஆதரவும்/ எதிர்ப்பும் அமையும்.

அவர் மட்டுமல்ல, இன்னும் திரைத்துறையில் இருந்து யார் வந்தாலும் எங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. எங்கள் முன் திரள்பவர்கள் நிச்சயமாக இன்னொருவர் பின்னால் நிற்க கூட முடியாது. விசித்திரமான இந்த நிலை நாங்கள் முன்வைக்கின்ற லட்சியங்கள் கொண்டிருக்கிற தனித்த வசீகரம். மாய ஈர்ப்பு.

இந்த நிலமும் இந்த அதிகாரமும் எங்களுக்கு தேவைப்படுகின்றன.

இந்த நிலத்திற்கும், இந்த மக்களுக்கும் நாங்கள் என்றும் தேவைப்படுகிறோம்.

இந்த நிலை மற்ற எவருக்கும் இல்லை எனும் போது மற்றவர் வருகை குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

தனித்துவமான எங்களது லட்சியப் பயணம், எங்களது அண்ணன் சீமான் தலைமையில் அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும். பயணம் நகர, நகர.. பாதை விரிய, விரிய உலகின் மூத்த தமிழ்க் குடி அடிமை விலங்கொடித்து உரிமைகளோடு சிறக்கும்.

நாம் தமிழர்.

🟥

நூல் வீதி 8 – கே ஆர் மீரா பெண்களின் அறியப்படாத அக உலகம்

நூல் வீதி 8
++++++++++

இந்த முறை புத்தக கண்காட்சியில் மலையாள மொழியின் மிக முக்கிய எழுத்தாளர் கே ஆர் மீரா அவர்களின் மொழிபெயர்ப்பு நூல்களை என் தம்பி எழுத்தாளுமை அகர முதலவனின் பரிந்துரையில் வாங்கினேன். “தேவதையின் மச்சங்கள் கருநீலம்” என்கிற அவரது சிறுகதை தொகுப்பு மோ செந்தில் குமாரின் மொழிபெயர்ப்பில் தமிழில் எதிர் வெளியீடு மூலமாக வெளியாகி இருக்கிறது.

சமகால மலையாள எழுத்துக்களில் புகழும் தனித்துவமும் கொண்ட படைப்புகளை கே ஆர் மீரா தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது கதைகளில் வரும் பெண்கள் தீர்க்கமானவர்கள். நரகமோ சொர்க்கமோ அவலமோ மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் தங்கள் வாழ்விற்கான தேர்வுகளை முடிவு செய்யும் இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். தன் ஆன்மா முழுக்க காதலால் நிரம்பியவர்கள். உணர்ச்சிகளின் விளையாட்டாக காதலை கருதாமல் அதனால் தீவிர மன எழுச்சி அடைந்து எந்த எல்லைக்கும் செல்பவர்கள்.

அவரது படைப்புலகை பற்றி அவரின் மேற்கோள்களோடு வெளிவந்திருக்கிற ஒரு மிக முக்கியமான கட்டுரை இது.

https://www.vogue.in/culture-and-living/content/writer-k-r-meera-i-dont-write-for-feminists-i-write-so-that-my-book-will-convert-readers-into-feminists-jezebel

குறிப்பாக “தேவதையின் மச்சங்கள்” கதையைப் படித்து முடித்த நேற்றைய இரவினை கடப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டேன். வேதனை கொடுமை இப்படியெல்லாம் நடக்குமா என்கிற சொற்களையெல்லாம் தாண்டி நிஜமான வாழ்க்கை எப்படி கோரமாக இருக்கிறது என்பதை கவித்துவமான தன்மொழியில் மீரா கதையாடி இருப்பது இந்த தொகுப்பை‌ அனைவரும் வாசிக்கும்படியாக மாற்றுகிறது.

இரண்டே இரண்டு கதைகள் கொண்ட மிகச்சிறிய தொகுப்பான இந்த நூலின் இரண்டாவது கதை கருநீலம். “சதி சாவித்திரி களும் கண்ணியமான உத்தம புருஷர்களும் இதை வாசிக்காதீர்கள் வாசித்தால் ஏற்படக்கூடிய ஒழுக்க மீறல்களுக்கு நான் பொறுப்பல்ல” என்கிற முன் அறிவிப்போடு தொடங்குகிற இக்கதை காதலாகி கசிந்து உருகிய ஒரு பேரிளம் பெண்ணைப் பற்றியது. உணர்ச்சியற்ற வாழ்வொன்றினை நோக்கி பயணப்படுகிற ஒரு துறவிக்கும், கணவன் குடும்பம் என வாழ்ந்து வருகிற ஒரு பெண்ணுக்கும் இடையிலான உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தை பற்றி மிகுந்த நுட்பமான மொழியில் மீரா கதையாக்கியுள்ளார்.

தமிழில் பெண்களுக்கான புனை உலகத்தை அம்பை சல்மா லீனா மணிமேகலை குட்டி ரேவதி சுகிர்தராணி கிருத்திகா போன்ற பலரின் படைப்புகள் மூலமாக அறிந்திருந்தாலும் மீராவின் எழுத்துக்கள் பெண்களின் அக உலகின் பல்வேறு கோணங்களை மிக ஆழமாக வெளிப்படுத்தியது.

கே ஆர் மீராவின் எழுத்துக்களில் இன்னும் ஒரு சில புத்தகங்கள் வாசிப்பிற்காக இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக அவைகளையும் ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தை இந்த சிறு நூல் ஏற்படுத்தி விட்டது.

கே ஆர் மீரா. சாகித்திய அகாதமி பெற்ற மலையாள மொழியின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர். தற்போது கோட்டயத்தில் வசித்து வருகிறார். இவரது நூல்களில் பல தமிழில் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கின்றன.

ஜெயகாந்தனின் புகழ் பெற்ற பெண் கதாபாத்திரங்களில் இருந்து கே ஆர் மீராவின் கதை உலகில் வருகின்ற பெண்கள் வரைக்குமான தனித்துவமான பெண்களின் அக உலகு பற்றியே உண்மையில் ஒரு நூலை எழுதலாம்.

உண்மையில் நாம் அறிந்த பெண்கள் என்று எவருமே இல்லை. பெண்களைப் பற்றி நாம் அறிந்ததாக புரிந்து கொண்டிருப்பவை அனைத்துமே கற்பிதம்தான். படைப்பின் விசித்திரமும் அதுதான். நமக்கான ஏதோ ஒன்றை அவர்களிடத்தில் நாம் தேடிக் கொண்டிருப்பதை தான், நாம் அறிந்த பெண் உலகாக‌ நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதுவெல்லாம் அவ்வாறு இல்லை என நம் நெற்றி பொட்டில் அடித்தாற் போல் விரிகிறது கே ஆர் மீராவின் புனைவுலகம்.

Page 4 of 15

Powered by WordPress & Theme by Anders Norén