பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூலை 2026 Page 2 of 3

வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்னால்… ஒரு நிமிடம்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னால் கரும்புகை சூழ்ந்த நிலத்தில் ஒரு இனப்படுகொலை நடந்த போது ‌ வீரச்சமர் புரிந்து எங்களது உடன் பிறந்தார்கள் தங்கள் மீது புலிக்கொடியை போர்த்திக்கொண்டு வான் ஏறிச்‌ சென்றார்கள்.

உலகம் முழுக்க தோல்வியின் நிழல் நம் விழிகளில் அப்பிக் கொண்டது. ஆம் . உறவுகளே ‌.. நாம் தோற்றவர்கள். தோல்வி தந்த வன்மத்தையும் வலியையும் நெஞ்சில் சுமந்தவர்கள்.

அப்போதுதான் அண்ணன் வந்தான்.‌ அவன் கண்களில் எப்போதும் ஆவேச நெருப்புத் துண்டு ஒன்று கனன்று கொண்டே இருந்தது. சொற்களில் கந்தகம் ஏற்றி இனத்தின் துரோகிகளை எதிரிகளை சுட்டெரித்தான். அவனுடைய அண்ணன் மேதகு விட்டுச்சென்ற அதே ஒற்றைப் புள்ளியில் இருந்து சீமான் தொடர்ந்தான். தொடர்ச்சியாக தொடர்ந்தான்.

இது பழிவாங்கும் சினிமா கதை அல்ல. மாறாக ‌ நிலத்தையும் மொழியையும் இனத்தையும் இழந்த ஒரு அடிமை தேசிய இனத்தின் மீள் எழுச்சி என்பதை சொந்த மக்களுக்கு புரிய வைக்க குரலில் அனலை ஏற்றி தமிழக வீதி எங்கும் கடந்த 15 ஆண்டுகளாக அலைந்திருக்கிறான்.

காட்டையும் நதியையும் நிலத்தையும் நிலத்திற்குள் புதைந்து கிடக்கும் வளத்தையும் காப்பதற்கு அண்ணன் சீமானை விட்டால் யாரும் இல்லை என்ற புரிதலுக்கு எம் இனம் வருவதற்குள் இவை எல்லாமே அழிந்துவிடும் என்கிற ஆபத்துதான் இப்போது முதன்மையானது.

அண்ணன் சீமான் அப்படித்தான் பேசுகிறான். அமெரிக்காவை கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே பூர்வ குடிகளாக இருந்த செவ்விந்தியர்களை அடிமைப்படுத்திய போது செவ்விந்திய தலைவர் சியாட்டில் வெள்ளையர்களை நோக்கி சொல்கிறார். ” எங்கள் சொற்களில் நாகரிகத்தை எதிர்பார்க்காதீர்கள். எங்களது நடத்தைகளில் நாசூக்கை எதிர்பார்க்காதீர்கள். எங்களது அரசியலில் சமரசத்தை எதிர்பார்க்காதீர்கள். நாங்கள் மண்ணின் மக்கள். மண்ணின் நிறத்தில் ஆனவர்கள். மண்மொழி பேசுபவர்கள். நீங்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் சமரசம் அவ்வளவு எளிதாக உங்களுக்கு கிடைக்காது. இறுதிவரை எங்கள் மண்ணை இறுக்கப் பற்றி கொண்டு நாங்கள் சாவோமே ஒழிய, ஒருபோதும் சரணடைய மாட்டோம்.”

அப்படித்தான் நாங்களும். எங்களது இளைஞர்கள் அப்பழுக்கற்றவர்கள். துண்டை சுழற்றிக்கொண்டு வாயில் விசிலை ஊதிக்கொண்டு கத்திக் கொண்டு வீதிகளில் அலையும் இளைஞர்களுக்கு மத்தியில், வெயில் கொளுத்தும் வீதி முனையில் நின்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்று அணிவகுப்பாய் நகர்ந்தவர்கள். ஒருவேளை எங்கள் அண்ணன் சமரசம் செய்து யாருடனோ கூட்டணி வைத்திருந்தால் இந்த எழுத்திற்கு அல்லது எங்களது ஆன்மாவிற்கு உயிர் இருந்திருக்காது.

நல்லவேளை.. எங்கள் அண்ணன் சீமான் எங்களை கைவிடவில்லை. எங்கும் அடமானம் வைக்கவில்லை.

எங்களைப் போல இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற வேறு யாரும் இல்லை என்பது தான் இந்த நேரத்தில் எங்கள் மனதில் உச்சபட்சமாக சுமக்கும் வலி. இந்த சுமையை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு நகரக்கூட முடியாத சூழலில், கடந்த 15 ஆண்டுகளாக எல்லாவற்றையும் இழந்து சத்தியத்தை சாட்சியாக வைத்து இறைவனாக மாறிப்போன தலைவனின் நினைவை சுமந்து நிற்கிறோம்.

அது ஒன்றுதான் எங்களது பலம். அந்த ஒற்றை உணர்ச்சி தான் இந்த மண்ணையும் மொழியையும் உயிருக்கு மேலாக நேசிக்க வைக்கிறது. நாங்கள் பிடித்தது புலியின் வாலை அல்ல. யுத்த களத்தில் இறுதிவரை சளைக்காமல் போரிட்டு அடிபட்டு காயங்களோடு பெருமூச்செறிந்து மரண வலியோடு நின்ற தாய்ப்புலி ஒன்றின் கனவை.

அது எங்களை மரணம் வரைக்கும் துரத்தும். ஒவ்வொரு தோல்வியின் போதும் நாங்கள் எங்களை நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் போராடுவதற்கு எரிபொருளாக அந்தக் கனவே எங்களை இயக்கும்.

எங்களது தமிழக மக்களே..!

ஆறுகளும் குளங்களும் நீர் நிலைகளும் ‌ நெகிழி குப்பைகளால் நிறைந்து காணாமல் போய்விட்ட காலக் கட்டத்தில் தான் இறுதி நம்பிக்கையாய் அண்ணன் சீமான் வருகிறான்.

அவனது ஒவ்வொரு சொல்லிலும் மண்ணை நேசிக்கின்ற ஆதிமனிதனின் ஆன்மா ஒளிந்திருக்கிறது. “பொறுக்கு விதை மரபினர்” என தன்னை அழைத்துக் கொள்கின்ற அவனுக்கு சத்தியமாக எந்தவித சுயநல நோக்கமும் இல்லை. எங்கோ ஒரு இடத்தில் சரண் அடைந்தால் அவன் நினைக்காத உயரத்தில் அவனால் நிம்மதி அடைந்திருக்க முடியும்.

ஆனால் அவன் இந்த மண்ணின் ஆதி மனிதன். எப்படி செவ்வந்தியர்கள் வெள்ளையர்களுக்கு எதிராக சமரசம் இல்லாமல் சரணடைய மாட்டோம் என சண்டையிட்டு அமெரிக்க பனி மலைகளில் சடலங்களாய் உறைந்து போனார்களோ, மண்ணை நேசித்து நின்ற எம் இனத்து போராளிகள் எப்படி முள்ளிவாய்க்காலில் தன் கரங்களுக்குள் தாய் மண்ணை இறுக்கிப் பிடித்தவாறே இறுதி மூச்சை விட்டார்களோ.. அதே வரிசையில் தான் எங்கள் அண்ணனும், நாங்களும் நிற்கிறோம்.

வாக்கு அரசியலில் தோற்பது அல்லது வெற்றி பெறுவது என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் ஊழல் பணத்தாலும், ரசிக மனப்பான்மையினாலும் ஒரு அறிவார்ந்த இளைஞர் கூட்டம் மீண்டும் மீண்டும் அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் சூழ்ச்சியாக வீழ்த்தப்படும் பட்சத்தில்.. அந்த நிலம் இருள் சூழ்ந்து வீழும்.

இனி உங்கள் கரங்களில் இந்த நிலத்தின், இந்த மொழியின், நம் நிலத்துக்கு குழந்தைகளின் எதிர்காலம் காத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளை செய்து , பிறகு வருந்தி எந்தப் பயனும் இல்லை.

இலட்சியக் கனவோடு வருகின்ற இளைஞர்களை திரையரங்க இருளை காட்டி வீழ்த்துவதும், திராவிட மோசடித்தனங்களை காட்டி, ஊழல் பணத்தைக் கொட்டி, உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பை திருடுவதும் இந்தத் தேர்தலோடு முடியட்டும்.

ஒவ்வொரு முறை மண்ணின் மக்களின் அரசியல் எழும்போதெல்லாம் திரையரங்கில் இருந்து யாரோ ஒரு நடிகர் வீதிக்கு வந்து, எழுகின்ற தமிழ்த் தேசிய எழுச்சியினை திசை மாற்றுகின்ற வேலை தொடர்ந்து நடைபெறுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இந்தியத் தேசியமும், திராவிடமும் கைகோர்த்து செய்கின்ற சதி வேலைகள் அவை.

ஆனாலும் இந்த தடைகளை எல்லாம் தன் அளவற்ற உழைப்பால், பொங்கி வழியும் வேர்வையால் வென்றுவிட துடிக்கிறான் என் அண்ணன் சீமான்.

அவன் கண்களில் சிவந்திருக்கின்ற காயங்கள், வெயிலில் வெந்து இருக்கின்ற அவனது கரங்கள், பேசிப் பேசி தொண்டை சதைகள் பிளந்து ஏற்பட்ட உதிரம் சுமக்கும் உதடுகள் என எல்லாவற்றையும் இந்த மண்ணை மொழியை இனத்தை காக்கும் போரில் அவன் பதக்கங்களாக ஏந்தி உங்கள் முன்னால் நிற்கிறான்.

இதற்குமேல் யாராலும் உழைக்க முடியாது. பேச முடியாது. போராட முடியாது. பாதிக்கப்பட்ட எல்லோருக்காகவும் அவன் பேசியிருக்கிறான்‌‌. போராடி இருக்கிறான். அவன் இன்றி கடந்த ஐந்து வருடங்களும் இயங்கவில்லை. மண் மலை காடு ஆடு மாடு அரசு ஊழியர் எளிய மக்கள் புலம் பெயர்ந்தவர்கள் நிலத்திலிருந்து அகற்றப்பட்டவர்கள் மதத்தால்,சாதியால் ஒதுக்கப்பட்டவர்கள் விளிம்பு நிலை மக்கள் என பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும் பல மணி நேரம் போராடி இருக்கிறான் . சத்தியத்தின் குரலாய் அவனே பேசியிருக்கிறான். அவனே அசலான எதிர்க்கட்சியாக மாறி ஊர் ஊராக அலைந்து மக்களின் குரலை கோரிக்கைகளை தேவைகளை உலகறியச் செய்து கொண்டிருந்தான்.

ஒவ்வொன்றும் உழைப்பின்,

உதிர வேர்வையின் ,

உயிர் உருக்கும்

அடிவயிற்றின் குரலின்

அசாத்தியங்கள்.

போதும் போதும்.. தோல்விகளால் நிறைந்திருக்கும் காயம் பட்ட அவனது நெஞ்சம்.. இனி அடையப்போகும் வெற்றிகளால் மருந்திடப்படட்டும்.

அதிகாரத்தை நோக்கிய பாய்ச்சலில் நம்பிக்கை கொண்டு மக்களை நம்பி நிற்கின்ற அண்ணன் சீமான் மற்றும் அவனது தம்பி தங்கைகள் இந்த முறை வென்றே தீர வேண்டும்.

அவனும் அவனது தம்பி, தங்கைகளும் எளியவர்கள்தான். எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் ‌. ஆனால் இந்த மண் செழிக்க, மொழி தழைக்க அவர்கள் அவசியம் இந்த நிலத்திற்கு தேவை.

திராவிடமோ,இந்திய தேசியமோ, திரையரங்க ரசிக மனப்பான்மையோ, இந்த நிலத்தில் மீண்டும் அழிவுகளை தான் உண்டாக்கும்.

தனித்து நிற்கும் புலி வனத்தைக் காக்கும். நம் இனத்தைக் காக்கும். இந்த நிலத்தை காக்கும்.

அனைவரும் சிந்திப்பீர்.

வாக்குப் பொத்தானை அழுத்துவதற்கு முன்பாக.. உங்களது அடுத்த தலைமுறை பிள்ளைகளின் முகம் உங்கள் விழிகளில் நிறையட்டும்.

நிலம் இருந்தால்தான் இனமிருக்கும். இனம் இருந்தால் தான் மொழி இருக்கும். மொழி இருந்தால்தான் நாம் இருப்போம்.

நாம் வாழ, நம் நிலம் வாழ, நம் மொழி வாழ, நாம் வாக்களிப்போம்.

அன்பு மகன் சிபிக்கு..!

என் செல்ல சிபி..

மிகச் சரியாக 21 வருடங்களுக்கு முன்பாக உனது பிஞ்சுக் கால்கள் என் நெஞ்சில் மோதிய தருணங்களை நினைத்து இந்த இரவில் மெய்சிலிர்க்கிறேன். அந்தத் தருணத்தை என்னால் என் வாழ்வின் எந்த நொடியிலும் மறக்க முடியாது. ஏனெனில் அதுதான் என் வாழ்வின் உச்சம். நான் பிறந்து, நோயில் நொந்து, துயரத்தில் உழன்று, கனவுகளால் நான் கரைந்துக் கொண்டிருந்த போது, இறுதியாய் நான் கண்டடைந்த கடவுளின் கருணை நீ.

நீ நடக்கும் போதும் ஓடும் போதும் குதிக்கும் போதும் நான் தான் ஓடி கொண்டிருக்கிறேன் நான் தான் பறந்து கொண்டிருக்கிறேன். சுருக்கமாக சொன்னால் உன் மூலம் நான் கனவு காணும் அனைத்தையும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என் நிழல் அல்ல. நீதான் என் அசல்.

நீண்ட நெடிய என் வாழ்நாளின் துயர இருட்டிற்கு பிறகு நான் அடைந்த மினுமினுக்கும் வெளிச்சம் நீ. நீ மற்ற குழந்தைகளைப் போல அல்ல சிபி. உன்னால் சிறுவயதிலேயே அனைத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது குறித்து இப்போதும் ஆச்சரியப்படுகிறேன். ஒருபோதும் என்னை தூக்கிக் கொண்டு நட என்று நீ எப்போதுமே சொல்லவில்லை. என் மீது சாய்ந்துக் கொள்ளத் தோன்றும்போது கூட நான் அமர்ந்த பிறகு தான் என் தோளில் சாய்வாய். அந்த அளவுக்கு உள்ளுணர்வு கொண்டவனாக நீ வளர்ந்தாய். இருக்கும் இடத்தை எப்போதும் மகிழ்ச்சியின் தோட்டமாக பூக்க வைப்பதில் நீ சிறந்தவன்.

உனக்கு தெரியுமா சிபி..??

உன்னோடு பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு வரும்போது என் தோளில் சிறகுகள் முளைத்திருக்கும். நான் பறந்து கொண்டிருக்கின்ற அந்த நொடிகளில் தான் நீ என்னிடம் மிகுந்த ரசனையோடு பேசிக் கொண்டிருப்பாய்.

ஆளற்ற கோவில் தாழ்வாரங்களில், பின்னிரவில் நம் நூலக அறையிலும், நேரக் கணக்கின்றி என் வாழ்வின் பொன்னொளி வீசிய தருணங்களை உன் முன்னால் நான் விவரிக்கின்ற தருணங்களில்.. முகம் முழுக்க புன்னகையோடு கண்கள் விரித்து நீ கேட்கின்ற அந்தப் பொழுதுகளில் நீ நானாகவும் ‌‌.. நான் நீயாகவும் மாறி நிற்கின்ற காட்சிகள் நம் வாழ்க்கை முழுக்க நிரம்பிக் கிடைக்கின்றன.

உடனிருந்த உறவுகள் பலவும் உதறிய பொழுதுகளில்‌ இனி யார் இருக்கிறார், நமக்கு என நான் துவண்டபோது, தோள் எழும்பி நீ நின்ற கம்பீரத்தில் அவையெல்லாம் உதிர்ந்து போயின.

உன்னைத் தாண்டி வேறு என்ன உலகம் எனக்கென்று இருக்கப் போகிறது..?

ஆனால் நீ அப்படி இல்லை. என்னைப் போன்று உதிர்பவைகளை நினைத்து துவள்பவன் நீயல்ல.நாடு முழுக்க உனக்கான உறவுகளை நீயே ஏற்படுத்திக் கொண்டாய்.

சித்தப்பாக்களும் பெரியப்பாக்களும் அத்தைகளும் கொண்ட அதிசய உலகம் அது. எங்கெங்கெல்லாம் புலிக்கொடி பறக்கிறதோ அங்கங்கெல்லாம் உனது உறவுகள் உன்னை கொண்டாடுகிறார்கள். குறிப்பாக உன்னுடைய பெரியப்பா சீமான்‌. உன்னுடைய வளர்ச்சியை ஒவ்வொரு துளியாக அருகில் இருந்து கவனித்து கண்கள் முழுக்க பெருமிதம் சுமக்கிறார். அதே போல உன் தாய்மாமன் பாக்கியராசன்உன்னை உருவாக்குவதில் அவரைப் போல நானே இருந்ததில்லை. அந்தவகையில் அந்த இருவருக்கும் நீ தீர்க்க முடியாத கடன்பட்டிருக்கிறாய். அதேபோல் நாடு முழுக்க உனக்கு உறவுப்பாலம் அமைத்திருக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கு. மிகப்பெரிய குடும்பம் நம்முடையது. அவர்களுக்கு எப்போதும் நேர்மையாக இருந்து விடு.

அதேபோல் உன் கடினமான சூழ்நிலைகளில் உடன் இருந்தவர்களை, நண்பர்களை எப்போதும் உள்ளார்ந்து நேசித்து கொண்டாடி மகிழ்வாக இரு.

அதேபோல் உன் ஆத்தாவும் தாத்தாவும். அவர்கள் உயிர் முழுக்க நீதான் நிரம்பி இருக்கிறாய். உன்னுடைய அம்மாவிற்கும் தம்பிக்கும் நீதான் அனைத்தும்.நீ அந்த உலகத்தின் கதாநாயகன்.

இதையெல்லாம் சற்று விலகி நின்று பார்க்கும்போது.. உன் மீது எனக்கே சிறிது பொறாமை ஏற்பட்டு விடுகிறது‌.

நீதானே அடிக்கடி சொல்வாய்.. “அப்படி

ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என. “

இப்போது அதற்கென உனக்கு எல்லா கதவுகளும் திறந்து விட்டன.

இனி வாழ்க. !

பிறந்தநாள் வாழ்த்துகள்.

♥️

முடிவில்லா முத்தங்களுடன்..

அப்பா.

தனிப்பட்ட வாழ்வும், அரசியலும்..!

வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை பொது வாழ்க்கை என்று நாமெல்லாம் பிரித்துப் பேசிக் கொள்வது என்பது மிகவும் சமீப காலத்திற்கு உரியது என்று நினைக்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் இன்னமும் உதாரணமாக பார்க்கப்படும் காமராஜர் கக்கன் ஜீவா நல்லகண்ணு சீனிவாச‌ராவ் என எண்ணற்ற தலைவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை வேறு சமூக வாழ்க்கை வேறு என்று வாழ்ந்தவர்கள் அல்லர்.போர்ச் சூழலில் வாழ்ந்திருந்தாலும் எம் தேசியத் தலைவர் மேதகு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவரது பொது வாழ்க்கையோடு கலந்து தான் இருந்தது

இன்னும் ஆழமாக சந்தித்தால் அவர்களுக்கு பொது வாழ்க்கை தவிர்த்து விட்டு தனிப்பட்ட வாழ்க்கை என்பதே இல்லை. திராவிடக் கட்சிகளின் வருகைக்குப் பின் தான் அவர்களது ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படும் போது தனிப்பட்ட வாழ்க்கையை கேள்வி கேட்கக் கூடாது என்பதான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இந்திய அரசியல் வரலாற்றிலும் சரி உலக அரசியல் வரலாற்றிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கை என்பது எப்போதுமே கேள்விக்கு உரியதாகவே இருந்து வந்திருக்கிறது. மகாத்மா காந்தியிலிருந்து அண்ணல் அம்பேத்கரில் இருந்து, நேரு ஜின்னா போன்ற பல தலைவர்களின் வாழ்க்கை முறையில் இருந்த எல்லா அம்சங்களும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டில் அதிகமாக விற்கப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவரின் புத்தகம் எதுவெனில்.. அது காந்தியடிகளின் சத்திய சோதனை தான். சத்திய சோதனை காந்தியின் வாழ்க்கை வரலாறு சம்பவங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சூழல்கள் ஆகியவற்றைப் பற்றியதுதான்.

இதற்கு முன்னால் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தொல் திருமாவளவன், வேல்முருகன், தியாகு, கனிமொழி,அண்ணன் சீமான், வைகோ,கமலஹாசன் போன்ற பலரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் விமர்சித்தபோது, இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை தானே என்று எவரும் தற்போது விஜய்யை காப்பாற்றுவது போல அப்போது காப்பாற்றவில்லை. அவரவர் பிரச்சினையை அவரவர் எதிர்கொண்டார்கள். ஆனால் கேள்விகள் என்பது எழுந்து கொண்டுதான் இருந்தன.

இப்போதுதான் விஜய் பற்றி பேசும்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச கூடாது என எல்லோரும் சொல்லிக் கொள்கிறோம்.

தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பின்னால் ஒவ்வொருவருக்கும் அவர்களின் அந்தரங்கப் பிழைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பொது வாழ்க்கையில் வந்துவிட்ட ஒரு மனிதனின் எல்லா செயல்களும் கேள்வி கேட்கப்படும் என்ற உச்சபட்ச உணர்வில் தான் மகத்தான பல தலைவர்கள் தங்கள் வாழ்க்கையின் எண்ணி பார்க்க முடியாத நேர்மையில் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சி முறை வந்த பிறகு.. அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த மனிதனும் அல்ல, ராஜாத்தி கனிமொழியின் தாய். கனிமொழி எனது மகள். என்பதான பல வார்த்தை விளையாட்டுக்கள் நடந்தன. ஆனால் இப்படி தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்வி வரும்போது அண்ணா கருணாநிதி போன்ற பலரும் எதிர்கொண்டார்கள்.

.இப்போது உலக அரங்கை உலுக்கி கொண்டிருக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் கூட தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுபவைதான். மீ டு இயக்கங்கள் போன்றவை எழுப்புகிற குற்றச்சாட்டுகள் அனைத்தும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தவைதான்.

ஆனால் சமீப காலத்தில் தான் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்விக் கேட்கக் கூடாது என்பதான விதிமுறைகள் விதிக்கப்படுவதாக உணர்கிறேன்.

பொதுவாக அரசியலுக்கு பொது மனிதனாக வந்துவிட்ட பிறகு அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்பதும், அரசியல் வாழ்க்கை என்பதும் பிரித்துப் பார்க்க முடியாத நுட்பமான இணைப்பில் இருக்கின்றன.

வாழ்க்கை என்பது தனிப்பட்டது இல்லை. நம்மை மட்டுமே சார்ந்ததும் இல்லை. நம் வாழ்க்கையில் பலர் இணைந்து இருக்கிறார்கள். பலர் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.

எனவே தனிப்பட்ட வாழ்க்கை என்பது கேள்வி கேட்கக் கூடாத அவரவருக்குரியது என கட்டமைப்பது பொதுவாழ்வில் இன்னும் மோசமான விளைவுகளை தான் ஏற்படுத்தும்.

தவறு செய்கின்ற அல்லது பிரச்சனைகளுக்கு உள்ளாகின்ற அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு வாழும் ஒரு எளிய தனி மனிதன் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் போது எப்படி பேதமின்றி எல்லோர் வாயிலும் புகுந்து புரண்டு வருகிறானோ.. அதுதான் அரசியல் களத்திற்கு வந்த பொது மனிதனுக்கும்.

There is no such thing as a private life here. It is an illusion — a disguise used to hide mistakes.

Once a person enters politics, there is no private life for them.

The very beginning of politics lies in the sacrifice of that privacy.”

இந்த தீர்மானகரமான என் முடிவு அல்ல. இதைத் தாண்டி ஒன்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

கவிதாபாரதிக்கு ஒரு குட்டு..!

காலையில் தம்பி இடும்பாவனம் கார்த்திக் கவிதாபாரதி எழுதிய பதிவு ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார்.

மிகவும் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு ஏன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் விவசாயிகள் ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கு இடம் இல்லை என அபத்தமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழ்நாட்டு வாழ்வியலை முற்றிலும் புரிந்து கொள்ளத் தவறிய அந்த கேள்வியை புத்திசாலித்தனமான கேள்வியாக நினைத்துக் கொண்டு மடக்கி விட்டோம் என மல்லாந்து படுத்துவிட்ட கவிதாபாரதி தன்னைப் பொதுவுடமைவாதி என்று வேறு சொல்லிக் கொள்வது அந்த இயக்கத்திற்கே அவமானம்.

ஏனெனில் பெரும்பாலும் இடதுசாரிகள் கிராம வாழ்வியலை கொண்ட எளிய வாழ்க்கை முறையை கொண்டவர்கள். படித்த பட்டதாரிகளாக இருந்தாலும் விவசாயிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சட்டமன்ற அவை நடக்காத நேரங்களில் விவசாயம் பார்க்கும் வாழ்க்கை முறையை கொண்டவர்கள். உறுதிப்படுத்திக் கொள்ள மன்னார்குடி திருத்துறைப்பூண்டி பகுதிக்கு பயணப்பட்டால் தெரியும்.

அப்படி பார்க்கும்போது.. நாம் தமிழர் கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் விவசாய குடும்பத்தின் பின்னணியில் தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் கல்வி கற்ற பட்டதாரிகள் தான். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு சொந்தமாக நிலம் இருக்கிறது. சிலருக்கு சொந்தமாக ஆடு மாடுகள் இருக்கின்றன. பூம்புகார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இளைய நகுலன் எம்பிஏ படித்தவர் என்றாலும் கடலிலே போய் மீன்பிடிக்கும் தொழிலை செய்பவர்.

விவசாயம் என்பதை தொழில் போன்று நினைத்துக் கொண்டு கவிதா பாரதி உளறி கொட்டியதை.. ஏதோ திருக்குறள் சொல்லிவிட்டார் என்பது போல வழக்கம்போல அணில் குஞ்சுகளும் திடல் தின்னிகளும் பரப்பி வருவது காமெடி.

தமிழ்நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான குடும்பங்கள் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ விவசாய வாழ்வியலை சார்ந்தவை தான். எடுத்துக்காட்டாக எங்கள் அண்ணன் சீமான். அவருக்கு ஊரில் விவசாய நிலம் இருக்கிறது. அம்மா அதில் விவசாயம் பார்த்து வருகிறார். ஊரிலிருந்து தான் அவருக்கு அரிசி போன்ற உணவு பொருட்கள் வருகின்றன. ஊருக்கு செல்லும் நேரத்திலும் தன் நிலங்களை பார்த்துவிட்டு வருவதை அண்ணன் சீமான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அடிப்படையில் அவர் ஒரு விவசாயி தான். திரைப்பட ஆர்வத்தின் காரணமாக சினிமா இயக்குனராக வேண்டுமென சென்னைக்கு வந்தவர் அவர்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விவசாயப் பின்புலம் இருக்கிறது. எங்களது மயிலாடுதுறை வேட்பாளர் காசிராமன். அவர் மிகப்பெரிய கால்நடை பண்ணையே வைத்திருக்கிறார். ஆடு மாடு மேய்த்தல் அவரது அன்றாடப் பணிகளில் ஒன்று. அந்த மேடையில் வேட்பாளர்கள் படித்த கல்வித் தகுதிகள் மட்டுமே காட்டப்பட்டன. வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. எனவே ஆடு மாடு மேய்ப்பவர்கள் விவசாயம் பார்ப்பவர்கள் என்றுதான் பெரும்பாலும் தனது வேட்பாளர்களை அண்ணன் சீமான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

சரி கவிதா பாரதி கதைக்கு செல்வோம். அவருக்கு புத்தக கண்காட்சிகளில் பேசுகின்ற வாய்ப்பை கொடுக்கின்ற திமுகவின் தலைமைச் செயலாளர் கே என் நேரு ஊரில் இன்னமும் ஆடு மாடு வளர்த்து விவசாயம் செய்து வருகிறார் அதை அவரே பேட்டி வழங்கி பெருமையாக சொல்லிக் கொள்கிறார்.

இது எல்லாம் கவிதா பாரதிக்கும் புரியும். அப்புறம் ஏன் அந்த பதிவு என்கிறீர்களா.. வேறு வேலை..?? பதிவு போடுவது ஒரு வேலையா என்ற கேள்வி உங்களுக்கு வரும்போது .. விவசாயம் என்பது தொழில் அல்ல/ அது பார்க்கும் வேலையும் அல்ல/ பதிவு போடுவது போல அது ஊதியத்திற்கு பார்க்கும் பிழைப்பும் அல்ல/ அது வாழ்வியல் என உரிய வரும்.

இந்த பொழப்புக்கு..??

காதலில் இல்லை நாட்கள்..

காதல் நாள்

என்னை கவருவதில்லை.

ஏனெனில்

நாள் பார்த்து

காதல் வர

காதல் ஒன்றும்

அமாவாசை

கிருத்திகை அல்ல.

தவிர..

நாள் பார்த்து

காதலிப்பவர்

என்று இங்கே

யாரும் இல்லை.

தினந்தோறும்

பருகும் நீர் போல..

கணந்தோறும்

இதயங்களால்

காதல் பருகப்பட்டுக்

கொண்டே இருக்கிறது.

❤️

காதல் நாட்களில்

வாழ்த்து அட்டைகள்

தேடுவோர் முகத்தில்

உலகத்திலேயே

சிறந்த ஒன்றை

தேர்வு செய்ய வேண்டும்

என்கின்ற தவிப்பு

அந்த வாழ்த்து அட்டைகளை

விட அழகு.

நீங்கள் வாங்கும்

பரிசுகளை விட

அந்த பரிசுகளுக்காக

நீங்கள் செலவு செய்யும்

நேரம், அலைச்சல்,

அதில் காட்டும் முனைப்பு

இவைகள்தான் அவர்களால் காதலிக்கப்படுகிறது.

❤️

என்றோ

உங்கள் காதலியோடு

அமர்ந்து

பேசிக் கொண்டிருந்த

உணவகத்தை

பூங்காக்களை

கடற்கரையை தற்போது

உங்கள் மனைவியோடு

கடப்பது தான் இருப்பதிலேயே

கொடுமையான பயணம்.

❤️

நினைவுகளில்

என்றும் நீ இருக்கிறாய்

என்று அவரவரும்

அவரவர் காதல்களை

இது போன்ற கவிதைகளை

படிக்கும் போது

புன்னகைப்பதன் மூலமாக

அங்கீகரிக்கிறோம்.

❤️

தப்பித்தவறி

மகளிடமோ மகனிடமோ

தன் காதலியின் அல்லது

காதலனின் சாயல்களை

ஏதோ ஒரு தருணங்களில்

தரிசிக்க நேருவது

நிகழ்ந்துவிட்ட துயரில்

எஞ்சுகின்ற கடைசிக் கருணை.

❤️

நீண்ட நாளுக்குப் பிறகு

சொந்த ஊருக்கு

வருகிறவர்..

அப்போது

இங்கு ஒரு கடை இருந்ததே

இப்போது அது எங்கே

எனக் கேள்வி எழுப்பும்போது

சற்றே ஞாபகங்களை

கொஞ்சம் கீறி விடுங்கள்.

நினைவின் குருதியோடு

ஒரு காதல் கதை

வழியத் தொடங்கும்.

❤️

மதுக்கூடங்களில்

காதலியை திட்டுவோரை

கண்டுகொள்ளாமல்

விட்டுவிடுங்கள்.

சற்று நேரத்தில்

அவரே அழத் தொடங்குவார்.

தனியே இரவில் நடப்பவர்

உரத்தக் குரலில் பாடுவது போல

அவர் அழப் பயந்துக்

கொண்டு தான்

திட்டிக் கொண்டிருக்கிறார்.

❤️

எதிர்பாராமல்

காதலியின் மகள்களை

சந்திக்கின்ற தருணத்தில்

அந்த முகத்தில்

எப்போதோ தொலைத்த

தேவதையை தேடாதவர்

யார் இருக்க முடியும்..??

சிறிய வெட்கத்தோடு

அந்த சிறுமியின்

தலையை வருடி விட்டு

செல்வது

ஆசி வழங்குவதல்ல.

மாறாக

கடந்தக் காலத்திற்குள்

நாமே புகுந்துப் பார்க்கும்

ஒரு கால எந்திரத்தின்

பயணம்.

❤️

தளபதி படத்தில்

ஒவ்வொரு முறை

ஷோபனாவை

ரஜினி

சந்திக்கும் போதெல்லாம்

இளையராஜா

இசை அமைத்துக்

கொண்டே இருக்கிறார்.

அதனால்தான்

மணிரத்னம்

ஷோபனாவை

வேறு ஊருக்கு

அனுப்பி வைத்துவிட்டார்.

காதலின் பிரிவுத்

துயரத்தை விட

அந்த இசைத்துளி

கொடுக்கும் துயரம்

இன்னும் கொடுமையானது.

❤️

பழங்கள் வாங்கிக் கொண்டு

கனக்கும்

மஞ்சள் பையோடு

தன் கர்ப்பிணி மனைவியை

அழைத்துச் செல்லும்

தாடி வைத்த

அந்த கைலிக்காரனை

பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

ஏதோ திட்டிக்

கொண்டே வருகிறான்.

மனைவி அதை

கேட்டும் கேட்காதது போல

எங்கோ

வேடிக்கை

பார்த்துக்கொண்டு வருகிறாள்.

சட்டென கர்ப்பிணி மனைவி

கல் தடுக்கி தடுமாற..

அந்தப் பையை கீழே போட்டுவிட்டு

மனைவியைப் பிடித்துக் கொள்கிறான்.

“பார்த்து வரதில்லையா..??”

எனத் திட்டிக்கொண்டே

பையில் இருந்து சிதறிவிட்ட

பழங்களை பொறுக்கும்

கணவனிடத்தில்

அதைத் தாண்டி

காதலை உணர

அந்தப் பெண்ணிற்கு

ஏதாவது புனிதத் தருணங்கள்

இருக்கிறதா என்ன..??

நினைவில் காதல் உள்ள இதயம்..

நேசித்தவரின்

நினைவுகளில்

உறைந்திருக்கும் ஓவியமாய்

நிலைத்திருக்கவே

எல்லோரும் விரும்புகிறோம்.

ஆனால்

ஏதோ ஒரு காலப் பிசகு..

சுழலும் இசைத் தட்டில்

நிகழ்ந்துவிட்ட இடறல்..

தெளிந்த வானில்

தெளிக்கப்பட்ட

மேகத்துண்டின் கீறல்..

நாம் சிறிது சிறிதாக

இன்னொருவர் இதயத்தில்

இறக்கத் தொடங்குகிறோம்.

அலைகழித்த

அலைபேசிகள்

கொஞ்சம் கொஞ்சமாய்

சாகத் தொடங்குகின்றன.

கடைசியாக வந்த

பகிரிச் செய்தி

பட்டுப்போன மலராய்

காய்ந்துக் கிடக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்து

சொல்லாவிடில்

இப்போதெல்லாம்

பிரச்சனை இல்லை.

காலை எழுந்தவுடன்

முதல் செய்தி அனுப்பும்

மூர்க்கமில்லை.

இரவு உறங்குவதற்கு

முன்னால்

இறுதியாய் பார்க்கும் முகம்

அதுவாகத்தான்

இருக்க வேண்டும்

என்பதற்காக

எப்போதோ எடுத்த

புகைப்படத்தை

இப்போது எடுத்து

பார்த்துவிட்டு

கண்களில் சாராயம்

ஊற்றிக் கொள்ளும்

சங்கடம் சத்தியமாய்

இனி இல்லை.

எதிரே எதிர்பாராமல்

தென்படும்

உணவகத்தின் பெயர்

உந்தன் பெயராக இருக்கும்போது

அரைமணி நேரத்துக்குள்ளாகவே

இரு முறை சாப்பிடும்

அவசியம் இனி இல்லை.

கேட்கின்ற

பாடல்களில் எல்லாம்

உன்னைப் பொருத்திப் பார்த்து

காதுகளில் காதலின் திராவகம்

ஊற்றிக் கொள்கிறத் தீவிரம்

இனி இல்லை.

காரணம் இன்றி

புன்னகைக்க..

கணக்கின்றி

வானம் பார்க்க..

பேருந்தின் ஜன்னலோரம்

சிகை தீண்டும் காற்றின்

நுனித் தொட்டு ரசிக்க..

எந்தக் காரணமும்

இனி இல்லை.

நிராகரிப்பின்

பாலையில்

படர்ந்திருந்த

இதயத்தின் ஈரமும்

இறுதியாக

இல்லாமல் போய்விட்டது‌.

யாரோ ஒருவர்

எவருடைய நினைவிலோ

எங்கேயோ இறந்துவிட்டார்

என்று எப்போதோ

தள்ளிச் சென்று

தனியே நின்று

நானே என் மரணத்தை

யாரிடத்திலோ

சொல்லிக்

கொண்டிருக்கிறேன்.

கேட்பவரும்

அது யாரோ

என்று நினைக்கும் வரை

நான் நிம்மதியாக இருப்பேன்.

அது

எனக்குத் தொடர்பு இல்லாத

இன்னொருவரின்

தோல்வி என்று கூட

சொல்லி

சங்கடமில்லாமல்

சமாதானம்

அடைந்துக் கொள்வேன்.

ஆனாலும்..

என்னையும் மீறி

கலங்குகிற

இந்த விழிகளைத் தான்

எங்கே புதைப்பது

என்று தெரியவில்லை

மிக முக்கியமான வேண்டுகோள்!

கடந்த 15 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் மீது ஊடகங்களும், திராவிட ஆதரவு அமைப்பு உதிரிப் பேமென்ட் அடியாட்களும், நடத்துகிற அவதூறு/ஆபாச வசைமொழிகள் இதுவரை தமிழ்நாட்டு அரசியல் சூழலில் நடைபெறாதது. அது ஒருவகை மூர்க்கமான வன்முறை. எதிர்க்கருத்து வைக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக காசு வாங்கிக்கொண்டு கருத்தியல் அடியாட்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்ற கலவரம்.

குறிப்பாக அரசியலுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத அண்ணன் சீமான் அவர்களது குடும்ப பெண்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் அவதூற்று ஆபாச வசை மொழிகள் இதுவரை எந்த அரசியல் தலைவர்கள் மீதும் ‌ நிகழ்த்தப்படாத உச்சபட்ச வன்முறை. எதனால் இந்த வன்முறை என்று யோசித்தால் அது அண்ணன் சீமான் கொண்டு இருக்கிற திராவிட எதிர்ப்பு மனநிலை. ஆனால் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத குடும்பப் பெண்களை நோக்கி அவதூறு பரப்புவது எந்த விதத்தில் நியாயம் என ஒரு பெண் கூட இந்த சமூகத்தில் கேட்கவில்லை என்பது ஈவேரா கட்டமைத்த ஆபாச திராவிட அரசியல் சூழலில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஒரு உதாரணம்.

எங்கள் குடும்பத்தில் வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் வீட்டு பெண்கள் மீது அறிவாலயத்தின் ஒட்டுத் திண்ணைகள், ரூ200 பேமெண்ட் யூடியூப் கருத்தியல் அடியாட்கள் வேலை பார்க்கிற மைனர் அதர்மம் மனோஜ் , கரிகாலன் போன்ற சில்லறைகளில் தொடங்கி கோவை ராமகிருஷ்ணன் போன்ற மூன்றாம் தர கேடு கெட்டவர்கள்‌ நிகழ்த்துகிற வன்முறை குறித்து எந்த பெண்ணிய அமைப்பும் பேசாமல் மௌனம் காக்கிற கொடும் நிலை நிகழ்த்தப்படுகிற வன்முறையை தாண்டிலும் கொடுமையானது.

எளிதாக அரசியலுக்கு முற்றிலும் தொடர்பில்லாத குடும்பப் பெண்களை அவதூற்று ஆபாச வசை மொழிகள் மூலமாக உருகுலைத்து, அதன் மூலமாக சமூக அரசியல் தளத்தில் பங்கேற்கிற அவர்களது குடும்பத்து ஆண்களை பலவீனப்படுத்த முடியும் என நினைக்கிற இந்த திராவிட” திருட்டுத்தன அயோக்கியத்தனத்தை” தமிழ்நாட்டில் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது உண்மையில் வெட்கக்கேடானது.

youtube thumbail -ல் தொடங்கி காணொளிகள் உட்பட பலவற்றிலும் நாங்கள் அரசியலில் பங்கேற்கிறோம் அவர்களுக்கு எதிரான கருத்தை பேசுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் பங்கேற்ப்பில் இல்லாத ‌அண்ணன் சீமான் அவர்களது மனைவியான எங்களது அண்ணியாரை/ எங்கள் குடும்பப் பெண்களை மிக இழிவாக பேசுகின்ற, காணொளிகள் பரப்புகிற அயோக்கியத்தனத்தை தமிழக அரசியல் தளம் வேடிக்கை பார்ப்பது என்பது அவமானகரமானது. இப்படி காசு கொடுத்து சில சில்லறைகளை ஏச விடுவதன் மூலமாக தங்கள் நிலையை பலப்படுத்திக் கொள்ளலாம் என திராவிடத் தரப்பு எண்ணுவது அவர்கள் ஏற்கனவே அடைந்து விட்ட தோல்வியையும், பலவீனத்தையும் காட்டுகிறது.

ஒரு அமைப்பில் பங்கேற்று இத்தனை ஆண்டு காலம் பொது வாழ்வில் இருந்த கோவை ராமகிருஷ்ணன் என்கின்ற கேவலங்கெட்ட மூன்றாம் தர நபர் ஒரு மேடையில் அண்ணன் சீமான் அவர்களை குறித்தும், சொந்த கிராமத்தில் இந்த அரசியல் நிலைகளுக்கெல்லாம் தொடர்பில்லாமல் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் ‌ அவரது தாயாரை குறித்தும், ஒரு கேடுகெட்ட ஆபாசமான மூன்றாம் தர விமர்சனத்தை எவ்வித உறுத்தலும் இல்லாமல் வைக்க முடிகிறது என்றால் இந்த திராவிட திருடர்கள் எப்பேர்ப்பட்ட மன நோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அருகில் நின்று கொண்டிருக்கின்ற ஒரு அரசியல் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு இது பற்றி எந்த உறுத்தலும் இல்லை.

இதுதான் இந்த சீரழிவின் தொடக்கமான ஈவேரா இந்த அயோக்கியர்களுக்கு கற்றுக் கொடுத்த கருத்துரிமை பெண்ணியம் கண்ணியம் கடமை வெங்காயம் பெருங்காயம் போன்றவை எல்லாம். பார்ப்பனீய எதிர்ப்பு என்ற பெயரில் அரசியல் தொடங்கிய இவர்களது அரசியல் நடவடிக்கையில் பெண் உடல்/ நடத்தை சார்ந்த “தேவடியாள் மகன்” என்ற வசை சொல்தான் ஒட்டுமொத்த திராவிட அரசியலின் மூலச்சொல். ஈவேரா வாயில் அதிகம் புழங்கியதும் இந்தச் சொல் தான்.

அதனால்தான் மிக எளிதாக கேடுகெட்ட மூன்றாம் தர திராவிடப் பொறுக்கிகளால் ஒரு பெண் உடல் சார்ந்த வசைமொழியை பேசிவிட முடிகிறது. இன்று சமூக வலைதளங்களிலும் மேடைகளிலும் இப்படி பேசுபவர்கள், அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. அனைவருமே “திராவிட மனநோய் பாதிப்பு” அல்லது ஆதிக்கம் கொண்டவர்களே.

உங்கள் திராவிடத்தை விமர்சிக்கிறோம் என்றால் நீங்கள் எங்களது கருத்து அல்லது தமிழ்த்தேசியத்தை விமர்சியுங்கள் . கருத்தியல் நிலை கொண்டு தாக்குங்கள். அதை எதிர்கொள்ளும் அறிவினை எம் பெருமை மிக்க தமிழின முன்னோர்கள் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதை விடுத்து விட்டு கோழைத்தனமாக இதில் முற்றிலும் சம்பந்தமில்லாத குடும்பப் பெண்களை, கிராமத்தில் வசிக்கும் வயதானத் தாயை, பெண் உடல்/ நடத்தை குறித்து அவதூற்று விஷம பொய் ஆபாச வசை மொழிகளை பேசும் இந்த youtube ப்ரூட்டஸ் மைனர், அதர்மம் மனோஜ் , கரிகாலன்,கோவை ராமகிருஷ்ணன் போன்ற மூன்றாம் தர சில்லறைகளை எதிர்த்து ஒரு சிறு கருத்து கூட பேசாத பெண்ணிய அமைப்புகள் அறிவாலயத்தின் கூலிக்காக காட்டுகிற மௌனம் அருவருப்பானது.

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளின் தோற்றம் நிகழ்ந்ததிலிருந்து இப்படி பெண்களை அவர்களது நடத்தைகளை குறிவைத்து பெண் உடல் சார்ந்த ஆபாச வசைமொழிகளை அரசியல் தளத்தில் நிகழ்த்துவது தொடர்கதையாகி வருகிறது. அந்தக் காலத்தில் மேடையில் வெற்றி கொண்டான் தீப்பொறி ஆறுமுகம் நன்னிலம் நடராசன் போன்றோர் செய்த அதே மூன்றாம் தர ஆபாச வசை மொழி அசிங்கமான உத்தியை இன்று சமூக வலைதள காலத்தில் இவர்களைப்போன்ற ஆபாச கருத்தியல் அடியாட்கள் செய்து வருவதும், அதற்கு திராவிட மாடல் அரசே துணை நிற்பதும் கேவலத்திலும் கேவலம்.

கடந்த காலத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜானகி அம்மையார் ஜெயலலிதா போன்ற பலரையும் ஆபாசமாக ஏசி பேசிய இந்த கும்பல் இப்போது அரசியல் களத்தில் பங்கேற்கின்ற தலைவர்களின் குடும்பத்தினரை குறிப்பாக அரசியல் தளத்தில் பணியாற்றாத பெண்களை குறி வைத்து ஆபாச வசைமொழிகள் வலையொளிகளிலும் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் பேசுவது திராவிடக் கருத்தியலின் பொறுக்கித்தனத்தை ஊரறிய செய்திருக்கிறது.

இப்படி அரசியல் தளத்தில் பங்கேற்காத , அரசியல் தளத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத குடும்பப் பெண்களை நோக்கி பெண் உடல்/ நடத்தை/ மொழி/ உடை/ போன்றவை குறித்து மிக ஆபாசமாக பேசுகின்ற இந்த இழிவானவர்களுக்கு எதிராக, வாய் திறக்காத ஒவ்வொரு பெண்ணிய கருத்தியல் போராளிகள்/ அமைப்புகள்/ கருத்தாளர்கள் போன்ற ஒவ்வொருவரும் நடந்து கொண்டிருக்கின்ற மிக மோசமான வன்முறைக்கு பொறுப்பாளிகளே.!

குறிப்பாக பெண்கள். இப்படிப் பேசுகிற மூன்றாம் தர ஆபாச கேடுகெட்டவர்களை உங்களது மௌனத்தின் மூலமாக நீங்கள் கடப்பது என்பது/ அல்லது அனுமதிப்பது என்பது இந்தச் சமூகத்தில் நீங்கள் வாழ முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்க.!

அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் உங்களின் ஒவ்வொரு குரலும் மதிப்புடையது என்ற நம்பிக்கையில் உங்களை நோக்கி இந்த கோரலை முன்வைக்கிறேன்.

மௌனம் கலையுங்கள்.!,

எச்சரிக்கை..!

திராவிடம் எதிர் தமிழ்த்தேசியம் என்ற விவாதம் உச்சநிலையை அடைந்து திராவிடத்தின் மூலவர் ஐயா ஈவேரா அவர்களின் முரண்பாடான கொள்கை முடிவுகளை, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றது போல உரைக்கப்பட்ட பிழைப்புவாத கோட்பாட்டுக் கருத்துக்களை இளம் தமிழ்த் தேசியர் பலரும் அம்பலப்படுத்தி வருகிற நிலையில், தன்னை பலவீனத் தரப்பாக உணர்ந்த திராவிடம் மிகப்பெரிய சதி வேலைகளை தொடங்கியுள்ளது.

அதில் பிரதானமாக தமிழ்த்தேசிய கருத்தியலின் பெருமித அம்சங்களை தவறாக சித்தரிப்பது/ இழிந்துப் பேசுவது போன்ற வேலைகளை திராவிட தரப்பிலிருந்து பேசும்போது அதன் சதி வலையை நாம் அம்பலப்படுத்தி வருவதால் , தமிழ்த்தேசிய இனத்திலிருந்தே ஒருவரை வைத்து இந்த வேலைகளை திராவிடத் தரப்பு திட்டமிட்டு செய்யத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக தமிழர் இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பற்றி அவர் தவறான கருத்துக்களை பேசுகிறார் என அயலகத் தமிழ் உறவுகள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், மூவேந்தர்களைப் பற்றி தற்போது அவர் பேசி வருகிற காணொளிகள் பரப்பப்படுகின்றன.

மதிப்பார்ந்த நம் அண்ணன் திருமாவளவன் திராவிடத் தரப்பிற்கு ஆதரவாக நிற்கின்ற நிலைமை விசித்திரமானது அல்ல. 2009 இனம் அழிந்த காலத்திலேயே இனமழித்த காங்கிரஸ் மேடையிலேயே நின்று அப்போது காங்கிரஸ் தலைவரான “சோனியா வாழ்க” என முழக்கம் போட்டு நாம் தலைக்குனிந்தத் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. எனவே அவர் நிலைமை குறித்து நமக்கு எந்த ஆச்சரியமும் வியப்பும் வெறுப்பும் இல்லை. அவர் அப்படித்தான்.

பல நேரங்களில் தமிழ்த் தேசியம் குறித்தும் தமிழ்த் தேசிய தலைமைகள் குறித்தும் மிக மோசமான வசை மொழிகளோடு விமர்சனங்கள் அவர் வைத்த போதும் கூட நாம் எதிர்வரும் விமர்சனம் ஏதும் வைக்காமல் அமைதியாக கடந்து போனது திராவிடத்தின் சதி வேலைகளை புரிந்து கொண்ட பட்டறிவின் காரணமாகத்தான்.

திராவிடம் இது போன்ற வேலைகளை செய்வதில் கெட்டிக்காரத்தனமானது. நம் உடன் பிறந்தார்களையே நமக்கு எதிராக நிற்க வைத்து, நம்மை மோதிக் கொள்ள வைத்து அதன் மூலமாக ஆதாயம் பெற முயற்சிக்கின்ற மிக இழிவான வேலையை திராவிடத் தரப்பு செய்யும். எப்படி வட மாவட்டங்களில் வன்னியர்/ஆதித்தமிழர் மோதலை தக்கவைத்து திராவிடம் அதிகாரத்தின் உச்சத்தில் எப்போதும் நிலைத்திருக்கிறதோ அதேபோன்ற வேலையை எல்லா இடங்களிலும் செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும்.

அண்ணன் திருமாவளவன் கூட தற்போது அறிவித்திருக்கிறார் அசலான (?) தமிழ்த் தேசிய மாநாடு ஒன்றை தான் நடத்தப் போவதாக. அதற்கு நம் வாழ்த்துக்கள். அதை எழுந்து வருகிற தமிழ்த் தேசிய உணர்ச்சிக்கு கிடைத்திருக்கிற வெற்றியாக நாம் கருதுவோம். அதே சமயத்தில் கருத்தியல் தளத்தில் பலவீனம் அடைந்து கோமா நிலையில் கிடக்கும் திராவிடத் தரப்பிற்கு வலு சேர்க்கிற வேலையாக அந்த மாநாட்டினை அண்ணன் உருவாக்கி அதில் தமிழ்த் தேசிய தலைமைகளை விமர்சிக்கின்ற ஒரு தளமாக மாற்றுவார் , திராவிடத் தரப்பு மாற்ற வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதில் நாம் செய்ய வேண்டியது “அமைதியுடன் கூடிய அறிவார்ந்த புறக்கணிப்பு”.

எனவே ஒரே இனத்திற்குள்ளாக மோதி ரத்தம் குடிக்க வைக்கிற திராவிடத் தரப்பின் சதிகளை உணர்ந்து, அண்ணன் திருமாவளவன் முன் வைக்கின்ற ஆதாரமற்ற செய்திகளை நாம் புறக்கணித்து , மேலும் வலிமையாக தமிழ்த் தேசிய கருத்துக்களை நேர்மறை எண்ணத்தோடு பரப்பி வருவதே தமிழ்த் தேசியப் பணி என உணர்வது நலம். அவருக்கு பதில் சொல்லி அல்லது அவருக்கு எதிர்வினை ஆற்றி திராவிடத் தரப்பு எதிர்பார்க்கிற உள்குழு மோதலை ஏற்படுத்தாமல் “அறிவார்ந்த புறக்கணிப்போடு” அமைதியாய் கடப்பது ஆகச்சிறந்தது.

அதற்கு ஈடு செய்யும் விதமாக தமிழ்த் தேசிய அரசியலின் எழுச்சியின் வடிவமாக திருச்சியில் நடக்கும் “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026” செய்திகளைப் பரப்புவது மற்றும் சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாற்றுப் பங்களிப்புகளை, தமிழ் தேசிய பெருமித நிலைகளை இன்னும் வலிமையாக பேசி அல்லது எழுதி பரப்புரை செய்வதுதான் சூழ்ச்சி சூழ்நிலைகளைப் புரிந்து கொண்ட தமிழ்த் தேசியர்களின் வேலை.

தமிழ்த்தாய் வாழ்க ! தலைவர் மேதகு வாழ்க !

ஜனநாயகத் தீங்குகள்- குடியரசு நாள் சிறப்புக் கட்டுரை

ஜனவரி 26 குடியரசு தினம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மையான நோக்கமாக மக்களின் நலன் சார்ந்த ஜனநாயகம் முன்னிறுத்தப்படுகிறது. உண்மையில் ஜனநாயகம் என்பது மிகச் சரியான ஒன்றா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மக்களின் பெரும்பான்மை கருத்து என்பதன் வாயிலாக கட்டமைக்கப்படும் ஜனநாயகம் ஆகப் புனிதமானது அல்ல. ஏனெனில் மக்களின் பெரும்பான்மை கருத்து என்பது எப்போதும் ஒட்டுமொத்த சமூகத்திற்கான நலன்களைச் சார்ந்தது அல்ல. அது அந்தந்தக் காலச் சூழல்களுக்கு உட்பட்டது. மக்கள் விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் விருப்பம் ஒன்றையே சமூகத்தின் விளைச்சலாக கருதிக் கொள்ள வேண்டும் என எல்லோரும் முடிவெடுத்தால், இந்த சமூகம் அடைந்திருக்கும் எல்லா சீர்த்திருத்தங்களும் ஜனநாயகத்தின் அளவுகோல்களின் படி எதிர்க்கப்பட வேண்டியவையே..

ஏனெனில் மக்கள் பாதுகாப்பாக அந்த சூழ்நிலைக்கு, சுகமாக, வாழ்வதற்கு ஏற்ற ஒன்றையே விரும்புவார்கள். மக்களின் விருப்பத்திற்கு, எதிர்காலம் சார்ந்த ஒட்டுமொத்த நலன் சார்ந்த சிந்தனைகளோ/ கருத்துக்களோ இருப்பதில்லை.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய தீங்கு என்னவென்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த தமிழர்களுக்கு நன்கு புரியும். பெரும்பான்மையினர் விரும்புகிறார்கள் என்ற மலினக் காரணத்திற்காக, தீங்குகளை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கிற கேடு நமது மீது வழங்கப்பட்டிருக்கிற ஜனநாயகத்தின் வாயிலாக திணிக்கப்பட்டிருக்கிறது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மக்கள் விரும்பிய எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என்கிற மூன்று தீங்குகளால் தமிழகம் அடைந்திருக்கின்ற பின்னடைவுகள் ஒன்றல்ல, இரண்டல்ல. எம்ஜிஆர் ஒரு திரைப்பட நடிகர் , ஜெயலலிதா ஒரு திரைப்பட நடிகை, கருணாநிதி ஒரு வசனகர்த்தா என்பது போன்ற எளிய / ரசிக மனப்பான்மை சார்ந்த மலினமான காரணங்களுக்காக அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைத்த மக்கள் , இன்று திரையரங்க இருட்டினில் தங்கள் எதிர்காலத் தலைவர்களை தேடும் மனநிலையில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

இதுவரை உலகத்தில் பொன்னான ஆட்சி காலத்தை வழங்கியவர்கள் பலரும் தனது ஆட்சியின் ஒரு முறைமையாக சர்வாதிகாரத்தினை கையாண்டார்கள், என்பதுதான் மிக முக்கியமான செய்தி. முதன்முதலாக பொதுவுடமை அரசாங்கத்தை கட்டமைத்த ரஷ்யப் புரட்சி மற்றும் சீனப் புரட்சி என பல புரட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளையே பிரசவித்தன.

ரஷ்யப் புரட்சி முடிவில் புரட்சியாளர் லெனின் அமைத்த ஆட்சி மித சர்வாதிகார ஆட்சி என்றால் அவரது தொடர்ச்சியாக வந்த ஸ்டாலினின் ஆட்சி முழு சர்வாதிகார ஆட்சி. ஏனெனில் சர்வாதிகாரம் அல்லது முழுமையான உச்ச அதிகாரம் ஆகியவற்றால் தான் அதுவரை நிகழ்ந்து வந்த அனைத்து தீங்குகளையும் ஒழிக்க முடியும் என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலைப் பெற்ற தமிழர் நிலம் எவ்வாறு அமைய வேண்டும் என நம் உயிர்த் தலைவர் தேசியத் தலைவர் மேதகு அவர்களிடம் கேட்டபோது, மிகுந்த தீர்க்கத் தரிசனத்துடன் புரட்சிகர சோசலிசக் குடியரசு நாடாக ஈழம் அமைய வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை தலைவர் பதிவு செய்தார்கள்.

ஜனநாயகம் பிரசவிக்கின்ற பெரும்பான்மைக் கருத்துக்கள் என்பதன் மகத்தான தீமை என்னவெனில், ஆட்டு மந்தையாக இருக்கின்ற மக்களின் விருப்பங்கள் அப்படியே நிறைவேறுதான்.

எனவேதான் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை என்பது அன்பான சர்வாதிகாரமாக இருக்கும் என்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் விவரித்தார். இதை நீட்சி தான் அவர் விவரிக்கின்ற தாய்மைப் பொருளாதாரம்.

அது என்ன அன்பான சர்வாதிகாரம் … அதற்கும் அவரே பதில் சொன்னார். உடல் காச்சலால் பாதிக்கப்படும் போது ஊசி போடுவதை எந்த குழந்தையும் விரும்பாது. ஆனால் ஊசிப் போட்டால் தான் உடல் நலன் பாதுகாக்கப்படும் என்று வரும்போது குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக ஊசி போடுவது தான் அன்பான சர்வாதிகாரம் என எளிய மொழியில் அண்ணன் சீமான் விளக்கினார்.

உண்மையில் இது சாத்தியமா..?? இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதற்கான வழிவகைகளை கொண்டிருக்கிறதா என்பதை எல்லாம் பற்றி யோசித்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில்

“இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை, இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக நிலைநிறுத்தவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும்:

சமூக, பொருளாதார, அரசியல் நீதி;

எண்ணம், வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் சுதந்திரம்;

தகுதிப்பாடு, வாய்ப்புநலம் இவற்றில் சமத்துவம்

ஆகியவற்றை எய்திடவும், அவர்களிடையே தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும் உடன்பிறப்புரிமை (சகோதரத்துவம்) ஆகியவற்றை உறுதிப்படுத்தவும்,

எங்களது, அரசியலமைப்பு நிர்ணய சபையில், 1949, நவம்பர் 26 ஆகிய இந்நாளில், இந்த அரசியல் அமைப்பினை ஏற்று, இயற்றி, எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொள்கிறோம்”.

எனக் காணப்படுகிறது.

ஆனால் முகப்புரையில் உள்ள “சமதர்மம் ,சமய சார்பற்ற தன்மை, சமூக அரசியல் மற்றும் பொருளாதார நீதி, தகுதிப்பாடு, வாய்ப்பு நலம் இவைகளை ஜனநாயக ரீதியில் நிறைவேற்ற முடியுமா என்கிற கேள்வி எழும்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் நம் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் பதிலாக இருக்கிறது.

ஏனெனில் இங்கே பெரும்பான்மை என்பது சமயச் சார்புள்ளதாக, சமூக அரசியல் மற்றும் பொருளாதார நீதிக்கு எதிராக, சமதர்மத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது என வரும்போது இங்கே ஜனநாயகம் என்பதே மாபெரும் தீங்காக மாறிவிட்டது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் சமமற்ற/ பயிற்றுவிக்கப்படாத பலவீனமான மக்கள் கூட்டத்தை வைத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாமே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே ஜனநாயகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய சிந்தனைகள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. சூழலியல், மக்கள் நலன், சமூக நீதி போன்றவற்றிற்கான அரசியலை ஒருபோதும் ஜனநாயகத்தின் வாயிலாக வென்றெடுக்க முடியாது.

உலகத்தில் பெரும்பான்மை பிரசவித்த அரசியல் தத்துவங்கள் என்று எதுவும் இல்லை. தனிமனிதர்கள் சிந்தித்த சிந்தனையில் இருந்து தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலன் தருகிற தத்துவங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் பிறந்திருக்கின்றன. எனவே எதிர்காலத் தலைமுறை மற்றும் மக்கள் மண்ணின் நலம் போன்றவற்றை தாய்மை உள்ளத்தோடு சிந்திக்கின்ற தனிநபர் சர்வாதிகாரத்தோடு கூடிய ஆட்சி முறைமைதான் இங்கே தேவையாக இருக்கிறது.

உண்மையில் குடியரசு நாளில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை என்னவெனில்.. நமக்காக நாமே உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதுதான்.

உமர் முக்தார்- பாலைவனச் சிங்கம்.

ஏக இறைவனான அல்லாஹ் “தனது கருணையை எப்படி மனிதர்களுக்கு காட்டினார்..?” என்ற கேள்வியை “lion of the desert” (1981) என்ற திரைப்படத்தில் உமர் முக்தர் தனது மாணவர்களிடத்தில் கேட்பதாக ஒரு காட்சி வரும்.

ஒரு மாணவன் ‘பேச்சு’ என்று சொல்லுவான். அவர்களுக்கு உமர் முக்தார் அதை விளக்க முயற்சிப்பார். “அல்லாஹ் மனிதர்களுக்கு தன் கருணையை தான் வழங்கிய சமநிலை மூலம் காட்டினார். சமநிலை தவறும் பட்சத்தில் எதுவும் கீழே விழுந்துவிடும்..” என விளக்கும் உமர் முக்தார் லிபிய நாட்டின் ஆகச்சிறந்த புரட்சியாளர்.

ஆம்.. சமநிலை தவறிய சமூகத்தில் தான் புரட்சி வெடிக்கும்.

உமர் முக்தார்.

இத்தாலியின் ஆதிக்கத்திற்கு எதிராக லிபியா நடத்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளம் அவர்.

அதே லிபியா அவரது மரணத்திற்குப் பிறகு போராடி விடுதலை அடைந்த பிறகு, கடந்த 2009ல் லிபிய நாட்டின் அதிபராக இருந்த மம்மர் கடாபி அரசு முறை பயணமாக இத்தாலியின் தலைநகரம் ரோமிற்கு சென்றபோது, தனது சட்டையின் முகப்பில் உமர் முக்தாரின் படத்தை வைத்துக்கொண்டு, உமர் முக்தாரின் வயதான மகனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

எந்த இத்தாலியின் ஆதிக்கத்திற்கு எதிராக உமர் முக்தார் தன் வாழ்நாள் முழுக்க போராடினாரோ, அதே இத்தாலியின் தலைநகரத்தில், லிபிய நாட்டின் தலைவர் தன் சட்டை பையின் முகப்பில் தன் நாட்டின் ‘புரட்சிகர பெருமித அடையாளமான’ உமர் முக்தாரை சுமந்து சென்றதும், உமர் முக்தாரின் மகனை கூடவே அழைத்து சென்றதும் உலகத்தின் விழிகளை பிரமிக்கச் செய்தன.

அதே லிபிய நாட்டு அதிபர் மம்மர் கடாபிக்கு எதிராக உள்நாட்டு கலகப் படைகள் போராட்டம் நடத்திய போது அந்தப் படைகளின் ஒரு படைப் பிரிவிற்கு பெயர் “உமர் முக்தார் படையணி”.

இதுதான் வரலாற்றின் விசித்திரம்.

ஆதிக்கம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து போரிடும் ஆற்றல்களுக்கு திரு உருவாக உமர் முக்தார் மாறி இருந்தார்.

உமர் முக்தாரின் இறுதி கால வாழ்க்கையை பற்றி தயாரிக்கப்பட்ட படம் தான் “பாலைவனச் சிங்கம்” என தமிழில் அழைக்கப்படும் ” lion of desert ” . இந்தப் படத்தை இயக்கியவர் மௌஸ்தபா அல் அக்காட் ( director Moustapha Akkad.) என்கிற புகழ்பெற்ற சிரியா நாட்டின் இயக்குனர். இவர் இறைத்தூதர் முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி” தி மெசேஜ் ” என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தையும் இயக்கியவர். கடந்த 2005 ல் ஜோர்டன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மெளஸ்தபா தன் மகளோடு கொல்லப்பட்டார்.

பாலைவனங்களைப் பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான திரைப்படம் புகழ்பெற்ற இயக்குனர் டேவிட் லீன் இயக்கத்தில் 1962ல் வெளியான லாரன்ஸ் ஆப் அரேபியா. இந்தத் திரைப்படத்தை அந்த காலத்தில் திரையரங்குகளில் பார்த்தவர்கள் உண்மையிலேயே பாலைவனத்தில் இருப்பது போல உணர்ந்து மிகுந்த தண்ணீர் தாகத்தில் தவித்ததாக செய்திகள் உண்டு.

புனிதப் போராளிகளுக்கு எப்போதுமே இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த இடம் தருகிறது. சொந்தத் தாய் மண் மீது நிகழ்ந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிடும் மாவீரர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு என கூறும் புனித குர்ஆன் அது ஒவ்வொருவரின் கடமை என்றும் வரையறுக்கிறது.

ஆழ்ந்த இஸ்லாம் பற்றுள்ள, குர்ஆன் பேரறிஞராக திகழ்ந்த உமர் முக்தார் ஏறக்குறைய 20 ஆண்டுகள் இத்தாலி அரசதிகாரத்திற்கு கடுமையான போராட்டங்களை நடத்தியவர். அவருக்கு லிபிய நாட்டு பாலைவனம் என்பது இத்தாலி நாட்டு ராணுவம் சிக்கிக் கொள்கிற பொறி. இத்தனைக்கும் ஒரு எளிய ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு மிக ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்த உமர் முக்தார் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியை தன் அளப்பரிய வீரத்தால் நிம்மதி இழக்கச் செய்தவர்.

இயக்குனர் மெளஸ்தபா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் தமிழர் தேசிய இனம் தொடர்பு அடைவதற்கான பல செய்திகள் உண்டு. குறிப்பாக போராடிக் கொண்டிருக்கின்ற போராளி இயக்கங்களை சர்வாதிகாரம் எப்படி தந்திரமாக கையாளும் என்பதற்கு இந்த திரைப்படம் பல செய்திகளை விவரிக்கிறது. முதலில் அதிகாரம் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள போராளிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். அந்தப் பேச்சுவார்த்தையில் போராளிகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்த அவர்களை மரியாதை குறைவாக கருத வைக்கிற முடிவுகளை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்கும். அவர்கள் இதைப் புரிந்து கொண்டு மறுக்கும் காலத்திற்குள்ளாக சர்வாதிகாரம் தனது பலத்தை அதிகரித்துக் கொண்டு போராளிகளுக்கு எதிரான இறுதிப் போரை தொடங்கும்.

எப்படி 2000 -2002 காலகட்டங்களில் அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் தமிழின போராளிகளை திசை திருப்பிவிட்டு, பலவீனமாக கருதப்பட்ட தனது பலத்தை சிங்கள பேரினவாதம் உலகம் எங்கும் சென்று எப்படி அதிகரித்துக் கொண்டதோ அதேபோல தந்திரத்தை தான் காலம் காலமாக சர்வாதிகார அரசுகள் செய்து வருகின்றன.

அசலான போராளித் தலைவர்கள் சில அடிப்படையான தகுதிகளை கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் சரணடைய மாட்டார்கள். தங்களது சுய வாழ்வைப் பற்றி ஒருபோதும் அவர்கள் ஒருபோதும் எண்ண மாட்டார்கள். இறுதிவரை உறுதியாக நின்று கொண்ட லட்சியத்திற்காக போராடுவார்களே ஒழிய ஒரு போதும் எதிரியிடம் சமரசம் அடைய மாட்டார்கள்.

உமர் முக்தாரின் வாழ்க்கையும் அவ்வாறே அமைந்தது. பாலைவனச் சிங்கம் என தமிழில் youtube இல் கிடைக்கின்ற இந்த திரைப்படத்தில் உமர் முக்தார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்ற அந்தோணிக் குயின் ஒரு மாபெரும் நடிகர். அந்த கதாபாத்திரமாகவே மாறி நமக்கு உமர் முக்தாரை ரத்தமும் சதையுமாக காட்டியவர். புகழ்பெற்ற நடிகர் ஆலீவர் ரீடு இத்தாலி நாட்டு தளபதியாக நடித்து உமர் முக்தாருக்கு மதிப்பு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமரசம் இல்லாமல் மரணத்திற்கு முன்னால் சிறிதும் அஞ்சாமல் போரிடுகிற உமர் முக்தாரின் வாழ்க்கை நமக்கு நம் தேசியத் தலைவர் மேதகு அவர்களின் வாழ்க்கையை நினைவூட்டுகிறது. உமர் முக்தாரின் வாழ்க்கை எப்படி எதிரிகளால் கூட மதிக்கப்பட்டதோ, அதேபோல நம் தலைவரின் வாழ்க்கையும் எதிரிகளால் மதிக்கப்பட்டது. இன்றளவும் சிங்கள பேரினவாத அரசால் ஒரு குற்றச்சாட்டு கூட நம் தலைவருக்கு எதிராக சொல்ல முடியாத அளவிற்கான உன்னத வாழ்க்கையை அந்த அறம் வழி நின்ற சான்றோன் வாழ்ந்தார்.

இறுதியாக இந்த திரைப்படத்தில் உமர் முக்தார் தூக்கில் இடுவதற்கு முன்பாக தன் தாய் நிலத்தின் உயர்ந்த மலை சிகரங்களை அவர் மிகுந்த கனிவோடு பார்க்கின்ற அந்தக் காட்சி நெகிழ வைக்கக் கூடியது. தாய் நிலத்தின் விடுதலைக்காக போராடிய நம் இனத்துப் போராளிகள் பின்னால் இறுக்கிக் கட்டப்பட்ட தங்களது உள்ளங்கைகளில் தாய் மண்ணை இறுக்கிப் பிடித்து வைத்திருந்த அதே உணர்வு.

பலமுறை இந்த திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். எண்பதுகளில் சென்னையில் திரையரங்கில் இந்த திரைப்படத்தை முதன்முதலாக பார்ப்பதற்கு என் தந்தை அழைத்துச் சென்றார். எத்தனை முறை பார்த்தாலும் அதே உணர்ச்சியை அந்த திரைப்படம் மானுடச் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருப்பது தான் அதன் செவ்வியல் தன்மை.

படம் பார்த்து முடித்து விட்ட பின்னரும் பாலைவன மண் புழுதி பறக்க குதிரைகளில் பாய்ந்து வருகிற அந்தப் போராளிகளின் உரத்த குரல் காதுகளில் கேட்டுக் கொண்டே இருப்பது சிலிர்க்க வைக்கக்கூடியது.

எதிரிகளால் மன்னிக்கக் கூடிய வாழ்க்கையை எந்த வீரனும் விரும்ப மாட்டான். ஆனால் எதிரிகளால் கூட மதிக்கப்படும் வாழ்க்கையை தகுதி வாய்ந்த வீரன் தன் வாழ்நாளில் பெற்றே தீருவான்.

அதற்கு திரையில் “உமர் முக்தார்”

அசலில் நம் தேசியத் தலைவர் “மேதகு”.

யூட்யூபில் இலவசமாக தமிழில் காணக்கிடக்கிறது. அவசியம் காணுங்கள்.

Page 2 of 3

Powered by WordPress & Theme by Anders Norén